கீரியும் பாம்புமாக மோதிக்கொண்டவர்கள் விஷாலை எதிர்க்க ஒன்றுகூடிய அதிசயம்..!


முதலில் ஒரு செய்தியை படித்துவிட்டு அப்புறம் மெயின் மேட்டருக்கு போகலாம்..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இன்று உதயமானது. பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய திரு அபிராமி ராமநாதன் அவர்கள் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுதான் அந்த செய்தி.. செய்தியில் மிகப்பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை.. காரணம் விஷால் தற்போது தன்னிச்சையாக எடுத்துவரும் வேலைநிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவே தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் இப்போது ஒன்றுகூடி இந்த வர்த்தக சபையை உருவாக்கியுள்ளனர்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள் தயரிப்பாளரான கலைப்புலி தாணுவும் திருச்சி மாவட்ட விநியோகஸ்தரான சிங்காரவேலனும். லிங்கா பட நஷ்ட ஈடு தொடர்பாக இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கடந்த இரண்டு வருடங்களாக அறிக்கை மூலமாக அக்கப்போர் நடத்தியது நாடறிந்த ஒன்று..

ஆனால் இன்று தங்களுக்கு பொதுவான வேறு ஒரு எதிரியை எதிர்ப்பதற்காக இவர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் போஸ் கொடுப்பதை பார்க்கும்போது, அரசியலை மிஞ்சும் காட்சிகள் திரையுலகிலும் உண்டு என்பதையே எடுத்துக்காட்டுகிறது.