ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்


தனது திருமணம் நல்லபடியாக முடிந்தால் குலதெய்வத்துக்கு கிடாய் வெட்டுகிறேன் என நேர்ந்துவிடுகிறார் விதார்த். திருமணம் நல்லபடியாக முடியவே நேர்த்திகடன் செலுத்துவதற்காக உறவினர்களுடன் லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.. வழியில் லாரியை ட்ரைவரிடம் இருந்து வாங்கி விதார்த் ஓட்ட விபத்து ஏற்பட்டு குறுக்கே வாகனத்தில் வந்த இளைஞர் பலியாகிறார்.

விபத்து நடந்த இடம் ஆளில்லாத பகுதி என்பதாலு, விதாரத்த் புது மாப்பிள்ளை என்பதாலும் அந்த இளைஞன் இறந்ததையே மறைக்க முற்படுகின்றனர் உறவினர்கள்.. இருந்தாலும் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க தனது வக்கீல் மாமா ஜார்ஜின் உதவியை நாடுகிறார் விதார்த். உதவி செய்ய வந்த வக்கீல் மாமாவால் பிரச்சனை விஸ்வரூபம் ஏறுகிறது.. அது ஏன்..? விதார்த் தப்பித்தாரா.? இல்லை நேர்ந்துவிட்ட கிடாய் தப்பித்ததா..? என்பதற்கு நெகிழ்வான விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

ஒரு இக்கட்டான தருணத்தில் நல்லவர்களாகவே இருந்தாலும் மனித மனம் எப்படி சுயநலமாக யோசிக்கிறது என்பதை முழுநீள படமாக நச்சென சொல்லியிருக்கிறார்கள்.

அலட்டல் இல்லாத பக்குவப்பட்ட நடிப்பு விதார்த்திடம்.. புது மாப்பிள்ளை மிடுக்கும், இடையில் நடந்த களேபரத்தால் அது தொலைவதையும், சூழ்நிலை காரணமாக தனது நேர்மையை தொலைக்கும் நிலையையும் காட்சிக்கு காட்சி பிரமாதமாக வெளிக்கொண்டுவந்துள்ளார் விதார்த்.

புதுமுகம் ரவீணா கதைக்கேற்ற கலையான முகம். படத்தில் இடம்பெற்றுள்ள சித்தன் மோகன், வீரசமர் உள்ளிட்ட அனைவருமே காமெடியில் கலக்குகிறார்கள். குறிப்பாக படத்தில் வக்கீலாக வரும் ஜார்ஜ் தான் திருப்புமுனை கதாபாத்திரம்…. சாதாரணமாக ரெண்டு சீனில் வந்துபோய்விடுவார் என்று பார்த்தால் அவர்தான் முழுப்படத்தையும் வழி நடத்துகிறார். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் வக்கீல் என்றால் கொஞ்சம் பார்த்துத்தான் இருக்கவேண்டும் என்கிற படிப்பினையை அவர் கேரக்டர் வாயிலாக இந்தப்படம் உணர்த்தியுள்ளது.

சரணின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்து கெடாவெட்டு விருந்துக்கு போய்வந்த உணர்வை தருகிறது. ராகுராமின் பின்னணி இசையும் நேரம் ஆக ஆக மனதில் திகில் கூட்டவே செய்கின்றது.. யதார்த்தமான கிராமத்து மாந்தர்கள் மத்தியில் சில நேரம் சூழலுக்கு ஏற்றாற்போல் கள்ளம் புகுந்துகொள்வதையும் அதன் பின் விளைவுகளையும் கோர்வையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.

வக்கீல் பிளேட்டை மாறுவதும் பூசாரி தான் சொன்னதற்கு மாறாக முடிவெடுப்பதும் எதிர்பாராத திருப்பங்கள்.. ஒரு விபத்து எப்படி இரண்டு உயிர்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை அழகியலுடன் சொல்லியிருக்கும் இந்தப்படம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு தரமான படைப்பு என அழுத்தி சொல்லலாம்.