எந்த நேரத்திலும் – விமர்சனம்


ஊட்டியை சேர்ந்த இளம் வயது வாலிபன் ராமகிருஷ்ணன், தான் காதலிக்கும் லீமா பாபுவை தனது அக்கா சாண்ட்ரா எமி, அவரது கணவர் யஷ்மித், அப்பா கிருஷ்ணன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைக்க தன்னுடைய காதலியை வீட்டுக்கு கூட்டி வருகிறார். ராமகிருஷ்ணனின் அக்கா ‘சான்ட்ரா எமி’யும் காதலித்துத் திருமணம் புரிந்தவர் என்பதால் லீமாவை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கும் ராமகிருஷ்ணனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

காரணம் லீமாவைப் பார்த்ததும் மூன்று பேரும் அதிர்ச்சியடைகிறார்கள். அந்த அதிர்ச்சியிலேயே காரில் புறப்பட்டுச் செல்லும் சான்ட்ராவின் கணவரும், அப்பாவும் விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். ஒரு மாறுதலுக்காக அக்காவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோத்தகிரி பங்களாவுக்கு வருகிறார் ராமகிருஷ்ணன்…

ஆனால் வந்த தினத்தில் இருந்தே சான்ட்ரா தனது குழந்தி மீது புகுந்த பேயின் மூலம் அமானுஷ்ய தாக்குதலுக்கு ஆளாகிறார். இறந்துபோய் பேயாக வந்திருக்கும் பெண்ணும் பார்ப்பதற்கு அசப்பில் சிவராமகிருஷ்ணனின் தற்போதைய காதலி லீமா பாபு போலவே இருக்கிறார்..

ஒரு சாமியாரின் மூலமாக சான்ட்ரா மகள் மீது பேய் புகுந்திருப்பதும் அது சான்ட்ராவை பழிவாங்க துடிப்பதும் ராமகிருஷ்ணனுக்கு தெரிய வருகிறது. இப்போது சான்ட்ராவை பழிவாங்க பேயாக வந்திருப்பதும் தெரிய வருகிறது.

சான்ட்ராவுக்கும் லீமாவுக்கும் இடையே புதைந்துள்ள மர்மம் என்ன என்கிற அதிர்ச்சிகரமான உண்மை என்பது இறுதியில் வெளிப்படுகிறது.

நாயகன் ராமகிருஷ்ணன் ஜஸ்ட் லைக் தட் அலட்டிக்கொள்ளாமல், தனக்கு செட்டாவது போல ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.. ஆனால் அந்த கேரக்டரில் பல நேரம் ‘தேமே’ என நிற்கிறார். நடிப்பை இம்ப்ரூவ் பண்ண இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.. இன்னொரு நாயகன், சான்ட்ராவின் கணவராக வரும் யஷ்மித்துக்கு ஜென்டில்மென் கதாபாத்திரம்..

கதைநாயகர்கள் ஓரளவு சிறப்பாகவே நடித்திருந்தாலும் படத்தில் அதிகமான பங்களிப்பு கதைநாயகி லீமாபாபு மற்றும் சான்ட்ராவுக்கும் தான். லீமாபாபு நனவுக்கதாபாத்திரத்தை விட பேயாக வரும்போது செம மிரட்டு மிரட்டுகிறார். சான்ட்ராவோ, இதற்கு நேர் எதிர்… நினைவில் செம ஸ்டைல் வில்லியாக மிரட்டிவிட்டு… கூடவே பேய்க்கு பயந்து நடுங்கி கெஞ்சி அழும்போது அய்யோ பாவம் என கலங்கடிக்கிறார். அப்படி அசகாய நடிப்பு. கேரக்டரில் மட்டுமல்ல நடிப்பிலும் சான்ட்ரா வில்லி தான் என நிரூபித்துள்ளார்..

சிங்கம்புலியின் காமெடி காட்சிகளில் நிறைய வறட்சி.. சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. பாடல்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லாததால் பின்னணி இசைத்திருக்கும் பி.சதீஷைத் தாண்டி சபேஷ் முரளி ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ஏறக்குறைய பேய்ப்பட சீசன் முடிவுக்கு வந்துவிட்ட நேரத்தில் பேயை நம்பி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை. வழக்கமான பேய்ப்படமாக இல்லாமல், ஒரே மாதிரியான தோற்ற ஒற்றுமை கொண்ட இரண்டு பேரை வைத்து வித்தியாசமான பேய்ப்படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார். ஆனால் அந்த வித்தியாசம் திரைக்கதையில் விட்ட ஓட்டையால் ‘சப்’பென ஆகி விடுகிறது..

எந்த நேரத்திலும் நீங்கள் ஓய்வாக இருப்பவர் என்றால் இந்தப்படத்திற்கு ஒரு டிக்கெட்டைத்தான் போடுங்களேன்..