பார்க்கணும் போல இருக்கு – விமர்சனம்


விஜய்யை வைத்து சுறா படத்தை இயக்கியவர், வடிவேலு, கவுண்டமணி இவர்களுக்கெல்லாம் ஒருகலாத்தில் நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆன எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ‘பார்க்கணும் போல இருக்கு’.. பல வருட போராட்டங்களுக்குப்பின் தியேட்டர் வாசலை தொட்டுள்ள இந்தப்படத்தை பார்க்கணும் போல இருக்கா, இல்லையா என்பதை பார்க்கலாம்..

கிராமத்தில் ஒரு இளஞ்சோடியின் காதல் வீட்டுக்கு தெரியவருகிறது.. உடனே ஆத்திரப்பட்டு அருவா தூக்காமல், ஆற அமர பேசி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்கின்றனர். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளில் மாப்பிள்ளையின் தம்பி மற்றும் பெண்ணின் தங்கை, இல்லையென்றால் மாப்பிள்ளையின் தங்கை மற்றும் பெண்ணின் அண்ணன் என புது உறவுகள் கிளைவிட தொடங்குவது வாடிக்கை..

ஆனால் இங்கே வித்தியாசமாக மாப்பிள்ளையின் அண்ணனுக்கும், பெண்ணின் அக்காவுக்கும் காதல் தீ பற்றிக்கொள்கிறது. இந்த விபரமும் பெரியவர்களுக்கு தெரியவர, அடடா முதலில் மூத்தவர்களுக்கு திருமணத்தை முடித்துவிட்டு, அப்புறமாக இளஞ்சோடிகளுக்கு பண்ணலாம் என முடிவெடுத்து அப்படியே செய்தும் வைக்கிறார்கள்.

வாழப்போன வீட்டில் அக்காவின் பொருந்திப்போகாத குணத்தால் எந்நேரமும் சச்சரவு தான்.. ஒருகட்டத்தில் அக்கா கண்ணை கசக்கிக்கொண்டு பிறந்த வீட்டுக்கே வந்துவிடுகிறாள், இப்போது புரிகிறது தானே..? எஸ்.. அதேதேதான்.. இரண்டு குடும்பத்துக்கும் பகை ஏற்பட்டு, ஏற்கனவே நிச்சயம் முடிந்துவிட்ட அந்த இளஞ்சோடியின் திருமணம் நடப்பதில் சிக்கல் உருவாகிறது.. சிக்கல் தீர்ந்ததா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ்..

‘நீ நான் நிலா” படத்தில் நாயகனாக நடித்த பரதன், இந்தப் படத்தில் கதையின் நாயகன். கிராமத்து இளைஞனாக தன் முதல் படத்தைக் காட்டிலும் இந்தப் படத்தில் மனிதர் மிகவும் கூடுதலாக திறமை காட்டியிருக்கிறார் பாராட்டுக்கள். கதாநாயகி அன்சிபா, த்ரிஷ்யம் படத்தில் கலக்கியவர், இந்தப்படத்திலும் சோடைபோகாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சூரி தன் வழக்கமான காமெடியில் இருந்து மாறுபட்டு ஜமாய்த் திருக்கிறார். குடிக்க பணம் கேட்கும் சூரியிடம் ஒருவர், “அண்ணே அதிகமா குடிக்காதீங்க” என்றபடி நூறு ரூபாய் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு சூரி இந்த நூறுக்கெல்லாம் அதிகமா குடிக்க முடியாது.” என நக்கல் அடிப்பது செம லந்து.

கஞ்சா கருப்பும் தன் பங்குக்கு காமெடியில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். ஒரு குடி பார்ட்டி, அண்ணே இந்த பஸ் மதுரை போகுமா என? ட்ரையினைப் பார்த்து கேட்டு, கஞ்சா கருப்பை கடுப்பேற்றும் காமெடி நிச்சயம் சிரிக்கவைக்கும். நாயகரின் தோழராக வரும் பிளாக் பாண்டியின் காமெடியும் மற்ற படங்களைக் காட்டிலும் ரசனை.

நாயகியின் அப்பா லிவிங்ஸ்டன், நாயகரின் அப்பா ஜெயப்பிரகாஷ், அண்ணன் விஜய் ஆனந்த், வட்டிக்காரர் சிங்கப்பூர் துரைராஜ், இரண் டொரு சீனில் வரும் முத்துக்காளை, நாயகியின் அவசர புத்தி அக்கா ஜானகி உள்ளிட்ட அத்தனை நட்சத்திரமும், பாத்திரம் அறிந்து நடிப்பு பிச்சை போட்டிருகிறார்கள்.

ஜி.ரமேஷின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கிராமிய எழில் கொஞ்சும் ஒவியபதி பதிவு. அருள் தேவின் பாடல்கள் இசையும் பின்னணி இசையும் இப்படத்தின் கதையோடும் கதாபாத்திரங்களோடும் பொருந்தியுள்ளது என்றாலும் நம்மை அவ்வளவாக ஈர்க்கவில்லை.

கிராமத்து கதையை எதார்த்தமாக சொல்ல முயன்று இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமாரின் வசனங்கள் தான் ஹைலைட்.. ராஜ்குமார் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் முழுக்க முழுக்க காமெடி கதை என்று தான் சொல்லணும் அதோடு கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் .