நடிகர் சங்க தலைவராக உள்ள விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிரடியாக களமிறங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருபிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் அரசியல் களம் காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது ஒருபக்க இருக்க விஷாலின் இந்த நடவடிக்கை காரணமாக தார்மீக ரீதியில் தான் பதவி விலகுவதாக நடிகர்சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் அவருடைய ராஜினாமாவை, தலைவர் நாசர் ஏற்கவில்லை.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பொன்வண்னன், விஷால் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் நான் சங்கத்தில் இருந்து ராஜினமா செய்யும் முடிவை எடுத்தேன். விஷால் தேர்தலில் நிற்பது அவரது தனிப்பட்ட விருப்பம். நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிவிட்டு, விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது” என்று கூறினார்.