நிமிர் – விமர்சனம்


அழகான கிராமம் ஒன்றில் ஸ்டுடியோ வைத்திருக்கும் அமெச்சூர் போட்டோகிராபர் உதயநிதி.. சிறுவயது முதல் காதலித்துவரும் பார்வதி நாயர், வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தனது மாமா எம்.எஸ்.பாஸ்கருக்கு உதவி செய்யப்போய் பக்கத்து ஊர் ரவுடி சமுத்திரக்கனியிடம் ஊரார் முன்னிலையில் செமத்தியாக அடி வாங்குகிறார் உதயநிதி..

சமுத்திரக்கனியை அடிக்காமல் செருப்பு அணியமாட்டேன் என சபதம் எடுக்கும் உதயநிதி அவரை தேடிச்செல்ல, வரோ துபாய்க்கு வேலைக்கு போய்விடுகிறார். இயலாமையுடன் நாட்களை நகர்த்தும் உதயநிதியின் வாழ்வில் அவரது காதல் காயத்துக்கு மருந்து பூசும் தென்றலாக நுழைகிறார் நமீதா பிரமோத்..

ஆனால் அவர்தான் தான் பழிதீர்க்க காத்திருக்கும் சமுத்திரக்கனியின் தங்கை என்பது பின்னர்தான் உதயநிதிக்கு தெரியவருகிறது. சமுத்திரக்கனியும் தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வருகிறார்.

உதயநிதி தனது சபதத்தை நிறைவேற்றினாரா.. சமுத்திரக்கனியை மோதி ஜெயிக்க முடிந்ததா..? நமீதாவின் காதலுக்காக வைராக்கியத்தை விட்டுக்கொடுத்தாரா..? இதற்கெல்லாம் விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

யதார்த்தமான வேட்டி கட்டிய கிராமத்து இளைஞனாக, நேஷனல் செல்வம் என்கிற சாதாரண ஒரு அமெச்சூர் போட்டோகிராபராக இந்தப்படத்தில் டோட்டலாக உருமாறியுள்ளார் உதயநிதி. எதிராளியிடம் அடிவாங்கி வேட்டி அவிழ்ந்து உள்ளாடையுடன் நிற்கும் அவமானத்தையும், பின்னர் பழிக்கு பழியாக அவன் ஊருக்கே சென்று இழுத்து போட்டு துவைக்க முற்படும் அந்த ஆவேசத்தையும் இம்மி பிசகாமல் பிரதிபலித்துள்ளார் உதயநிதி.

கதாநாயகிகளில் ஒருவரான பார்வதி நாயர், சந்தர்ப்பவாதியாக மாறி காதலை முறித்துக்கொண்டு ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொள்கிறார். ஆனால் பின்னர் என்ட்ரி கொடுக்கும் இன்னொரு நாயகி நமீதா பிரமோத், தான் வரும் காட்சிகளில் எல்லாம் தனது படு யதார்த்தமான நடிப்பாலும் புன்னகையாலும் கண் அசைவுகளாலும் ரசிகர்களை உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கிறார்.

சூழல் காரணமாக வில்லனாகும் முரட்டுத்தனமான கேரக்டரில் செம பிட்டாக பொருந்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.. உதயநிதியை போட்டு புரட்டி எடுக்கும் காட்சிகளில் நமக்கு கோபத்தை ஏற்படுத்துகிறார். உதயநிதியின் நண்பனாக வரும் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக வரும் அந்த அழகுப்பெண்ணும் படம் முழுதும் துறுதுறுவென வலையவந்து நம் கண்களை விட்டு அகல மறுக்கிறார். உதயநிதியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குனர் மகேந்திரன் குறைவான வசனங்களால், அழுத்தமான முகபாவங்களால் அப்ளாஸ் அள்ளுகிறார். பார்வதியின் அப்பாவாக வரும் சண்முகராஜன், கஞ்சா கருப்பு, பஞ்சாயத்து தலைவராக வரும் அருள்தாஸ், வெளிநாட்டு தொழிலதிபராக வரும் இமான் அண்ணாச்சி ஆகியோரும் கதையுடன் கலந்த காமெடி காட்சிகளில் இயல்பாக ஒன்றியுள்ளனர்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு தென்காசி கிராமங்களின் அழகை கதைக்கேற்ற சூழலுடன் சரியாக பொருத்தி இருக்கிறது. மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற வெற்றி பெற்ற மலையாள படத்தை, அதன் இயல்பு கெடாமல் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக ரீமேக் செய்த விஷயத்தில் ‘நிமிர்’ந்து நிற்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்..