நேர்மையாக ரியல் எஸ்டேட் தொழில் செய்ய நினைப்பதால் ஒரு சின்ன டீலிங்கை கூட முடிக்க தடுமாறுபவர் ஆரி. அவரது தங்கை அதுல்யா திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால், கிராமத்தில் இருக்கும் தங்களுக்கு சொந்தமான ஓடாத டூரிங் டாக்கீஸை விற்க சொல்லி பத்திரத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார் அம்மா சித்தாரா.
ஊரே அதில் பேய் குடியிருக்கிறது என அச்சப்பட, அதை பொய்யாக்கி, இடத்தை வாங்க வருபவர்களுக்கு நம்பிக்கை தருவதற்காக நண்பன் காளி வெங்கட்டுடன் பாழடைந்த அந்த தியேட்டரிலேயே சில நாட்கள் தங்குகிறார் ஆரி.
ஆனால் அங்கே ஒவ்வொரு இரவும் திகிலான அனுபவங்களை சந்திக்கிறார்கள் இருவருமே.. தவிர ஆரியின் கனவில் ஒவ்வொரு நாள் இரவில் வரும் நபர்கள், அன்றிரவே மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் அதற்கு காரணம் அந்த தியேட்டரில் உள்ள பேய் தான் என்பது ஆரிக்கு தெரியவருகிறது.
பேய் இந்த கொலைகளை செய்வதற்கு என காரணம்..? அதுவும் இந்த தியேட்டருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்…? இதனால் ஆருக்கு என்ன சிக்கல் வந்தது.. அதை சமாளித்து ஆரியால் அந்த தியேட்டரை விற்க முடிந்ததா என்பது மீதிக்கதை..
கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் ஆரிக்கு தோதான அழகான கதாபாத்திரம்.. எந்தவித அலட்டலுமின்றி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். குறிப்பாக நாகேஷ் திரையரங்கத்தில் அமானுஷ்ய காட்சிகளுக்கு நடுவே ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகி ஆஷ்னா ஜவேரி தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி க்யூட்டான நடிபை வெளிப்பட்டுத்திருயிக்கிறார். வாய்பேச முடியாத பெண்ணாக அதுல்யா ரவி மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். சமுதாயத்திற்காக போராடி உயிரை விடும் மாசூம் சங்கர் பிளாஸ்பேக்கில் கவர்ச்சியால் அசரவைப்பதுடன் பின்னர் பேயாக வந்து அதிரவும் வைத்துள்ளார்.
அழகான அம்மாவாக சித்தாரா, அன்பான டாக்டராக சமூக சேவகராக எம்.ஜி.ஆர்.லதா இவர்கள் இருவரையும் இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். காளி வெங்கட் காமெடியில் தனது பாணியில் முயற்சி செய்திருக்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
நௌஷாத்தின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக திகில் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை வைத்து இந்திய சந்தையில் நடைபெறும் ஒரு பெரிய பயாலஜிக்கல் மார்கெட்டிங் மோசடியையும் ஏழை எளியோரிடம் இருந்து அவர்களுக்கே அதை தெரியாமல் எடுத்து விற்பனை செய்கிறார்கள் என்கிற உண்மையையும் இதில் புட்டுப்புட்டு வைத்துள்ளார் இயக்குனர் இஷாக்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறியிருக்கும் இயக்குனர் இஷாக் எல்லோரையும் போலவே .மந்திரம், மாந்திரீகம் உதவியோடுதான் பேயை விரட்டுகிறார். ஆனாலும் வித்தியாசமான, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. ஒரு பேய் படத்திற்கான திகிலும் கூடவே காமெடியும் மேலும் ஒரு படியாக சமூகப் பொறுப்புணர்வும் நிறைந்துள்ளது படம். இயக்குனருக்கும் கதைக்கும் பாராட்டுகள்..