தவணை கட்டாத கார்களை தூக்கிவரும் கதைக்களத்தின் பின்னணியில் நட்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கதை தான் இந்த கூட்டாளி..
பைனான்சியர் சேட்டான உதயபானு மகேஸ்வரன் வணை கட்டாத கார்களை அதிரடியாக தூக்கி வரும் வேலையை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூவரிடம் ஒப்படைக்கிறார். இந்தநிலையில் வீட்டைவிட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் க்ரிஷா மீது, ஒரு கார் விபத்து மூலம் சதீஷுக்கு காதல் ஏற்படுகிறது.
இதனால் தொழிலில் சொதப்புகிறது.. கோபமாகும் சேட் இவர்கள் மீது நம்பிக்கை இழக்கிறார். இன்னொரு பக்கம் ஏரியா கவுன்சிலர் காரையே தூக்கியதால் அவர் இவர்களை போட்டுத்தள்ள ஆவேசம் காட்டுகிறார். தன மகளை காதலிப்பதா என போலீஸ் தந்தை இன்னொரு பக்கம் திமிருகிறார்.
இந்தநிலையில் கூடவே இருக்கும் நண்பர்களும் தன் காதலால் சிரமப்படுவதை பார்த்து, தனது காதலை கை விட்டுவிட்டு, நண்பர்களுடன் மும்பை போய் பிழைத்துக்கொள்ள திட்டமிட்டு கிளம்புகின்றார் சதீஷ். நண்பர்கள் தப்பித்தார்களா.? காதலர்கள் இணைந்தார்களா..? என்பது க்ளைமாக்ஸ்..
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ் ஆக்ஷன், காதல், காட்சிகளில் திறமையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காரை தூக்குவது என ஒரு சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி கிரிஷா க்ரூப், சதீஷ் மீது ஆசைப்படுவது, பிரச்சனையில் சிக்கும் போது, அவருக்காக ஏங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நண்பர்களாக வரும் அப்புக்குட்டி வழக்கம்போல முரட்டுத்தனமாக காமெடி செய்கிறார். இன்னொரு நண்பராக வருபவர் காதலில் தோல்வி கண்டவர் என்பதாலேயே அடிக்கடி சந்தேகக்கண்ணோடு நண்பனின் காதலை வெறுத்து டயலாக் பேசுவது ஓவர் டோஸ். நண்பர்கள், நட்பு பற்றிய படங்களில் நாம் என்னென்ன கிளிஷே காட்சிகளை எதிர்பார்ப்போமோ, அவை அத்தனையும் இதிலும் இருப்பது பலவீனம்..
டான்ஸ் மாஸ்டர் கல்யாண், அம்மாவாக நடித்திருக்கும் கவுசல்யா, ரவுடியாக அருள்தாஸ் என சொல்லும்படியான நடிகர்கள் இருந்தாலும், அவர்களது கதாபாத்திரமும் நடிப்பும் சொல்லும்படியாக இல்லை. இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலும், ஒளிப்பதிவாளர் சுரேஷ் நட்ராஜனும், இந்த கதைக்கு எந்த அளவுக்கு பணியாற்ற முடியுமோ அந்த அளவுக்கு பணியாற்றியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் படம், அதன் பிறகு வரும் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு கிளைமாக்ஸை நம் கண் முன் நிறுத்தும் வகையில் திரைக்கதை ரொம்ப சாதாரணமாக பயணிக்கிறது. அவ்வளவு பெரிய கவுன்சிலர் ட்யூ கட்டாமல் கார் வைத்திருப்பாரா..? நடுராத்திரியில் குடும்ப பெண்களுடன் காரில் வருபவர்களை வழிமறித்து காரை சீசிங் செய்யவேண்டிய அவசியம் என்ன..?
இப்படி பல கேள்விகளுடன் நம்மை அனுப்பி வைக்கிறான் இந்த கூட்டாளி..
பின் குறிப்பு ; படம் பார்க்கும்போதே அட சமீபத்தில் ஒரு பெரிய ஹீரோ நடித்த படம் போலவே இருக்கிறதே என உங்களுக்கு தோன்றினால்..? ஒன்றும் பண்ணமுடியாது