காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக யூட்யூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்துக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பொது தளங்களில் இருந்து வரவேற்பும் பாராட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவல நிலையை எளிமையாகவும் முழுக்க முழுக்க நேர்மையாகவும் பதிவு செய்திருக்கும் ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’. காவேரி பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தை நாட்டிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த வாரம் யூட்யூபில் வெளியிடப்பட்டது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்தை பாராட்டி பகிர்ந்தார். அடுத்த நாளே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பகிர்ந்தார். அந்த வரிசையில் இன்று, மூத்த அரசியல் தலைவரும் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக விளங்குபவருமான தோழர் ஆர்.நல்லக்கண்ணு படத்தை பார்த்ததோடு படத்தின் இயக்குநர் க.ராஜீவ் காந்தியை அழைத்து தனது பாராட்டுகளை பகிர்ந்துகொண்டார். வெளியீட்டு நிகழ்ச்சிக்கு உடல்நலக்குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போனதை தெரிவித்ததோடு படத்தை பாராட்டி ஒரு கடிதமும் தந்திருக்கிறார்.
‘ராஜீவ் காந்தி எழுதி இயக்கிய கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை காவேரி டெல்டா பாசனத்திற்குட்பட்ட ஆறு மாவட்டங்கள் தொடர்ந்து காவேரி தண்ணீர் வராததாலும், வறட்சியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. முன்பு வறண்ட மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு பிழைப்புத்தேடி வருவது வழக்கமாக இருந்தது. தற்போது நெற்களஞ்சியமான தஞ்சையில் இருந்து வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு குடி பெயர்ந்து வேலைக்கு செல்கின்றனர்.கடன் வாங்கி விவசாயம் செய்த மக்கள் கடனை அடைக்க முடியாமலும் விவசாயத்தை தொடர முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கடந்த 2 வருடங்களில் 300 பேருக்கும் மேலாக தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்துள்ள விவசாயிகள் பற்றிய கோர காட்சிகளை அப்படியே துல்லியமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குநர். அந்த குடும்பத்தை, பெற்றோரை இழந்த குழந்தைகளை, சோக காட்சிகளாக பார்ப்பது கணகலங்க செய்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள உண்மையை மறைத்து வருகிறார்கள். எல்லா விபரங்களையும் இந்த சிறிய ஆவணப்படத்தின் மூலம் வெளிப்படுத்திய தோழர் ராஜீவ் காந்திக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். –
தோழமையுடன்
ஆர்.நல்லக்கண்ணு.
இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர்கள் முருகதாஸ், சிம்புதேவன், ராஜசேகர், கணேஷ் பாபு, மீரா கதிரவன், நடிகை ராதா உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தின் இயக்குநர் க.ராஜீவ் காந்தியை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.
கொலை விளையும் நிலம் படத்தின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே… நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட விவசாய போராட்டங்களுக்கு தனது பலமான குரலை கொடுத்து வருகிறார். நெடுவாசல் போராட்டத்திற்காக சிறை சென்ற மாணவி வளர்மதி சிறையில் இருந்து வெளியானதும் ஜிவி.பிரகாஷ் அவரை தொடர்பு கொண்டு தனது ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். தற்போது மாணவி வளர்மதியின் உயர்கல்விக்கான அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். கொலை விளையும் நிலம் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் வளர்மதி கலந்துகொண்டார். அவரது ஆவேச பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதை அறிவிக்க திட்டமிட்டிருந்தார் ஜிவி பிரகாஷ். ஆனால் படப்பிடிப்பு காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போனது. வளர்மதி அடுத்து சட்டப்படிப்பு பயில விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.