ரேடியோ ஜாக்கி, சின்னத்திரை தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் நடிகர் ஆர்ஜே.பாலாஜி. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலின் வர்ணனையாளராகவும் இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கவனம் ஈர்க்கும் விதமாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டை புறக்கணிக்கும் போராட்டம் நடந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், ஐபிஎல் போட்டியில் ஆர்ஜே.பாலாஜி தான் .செய்ய வேண்டிய வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது என கூறியுள்ளார். மேலும் தனது மனதில் பட்ட சில விஷயங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டியை நாம் பார்க்கக்கூடாது என்று கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னார்கள். பிறகு, மைதானத்தில் பார்க்க வேண்டாம், டிவியில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு ஐபில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட வேண்டும் என்றார்கள். இப்போது ஐபிஎல் போட்டியே நடக்கக் கூடாது என்கிறார்கள். போட்டி நடக்கிறதோ, இல்லையோ என்னை மாதிரி ஆட்கள் அதில் வேலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள்.
இது எல்லாமே எதற்கு என்றால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் என்கிறார்கள். இது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், இப்போதிருக்கும் நிலைமை பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரியாதா? அப்படியே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றாலும் 234 எம்.எல்.ஏக்களையும், 40 எம்.பி.க்களையும் ஓட்டு போட்டு அனுப்பி வைத்திருக்கிறோமே அவர்கள் ராஜினாமா செய்யலாம்.
ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள் உடனே தேர்தல் அறிவிப்பார்கள் என்றால், அந்தத் தேர்தலில் யாரும் நிற்காதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கும். ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது.
நான் தனி மனிதனாகவும், என் நண்பர்களுடன் இணைந்தும் திருநெல்வேலி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 ஏரி, குளங்களைத் தூர் வாரி இருக்கிறோம். சிலர் ஆதாயத்துக்காக இதைப் பெரிதாக்குகிறார்கள். அதற்காக இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும். என ஆதங்கத்துடன் தனது உணர்வுகளை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தி இருக்கிறார்..