பாரதிராஜாவை ஒரு விழாவுக்கு பேச அழைக்கிறார்கள் என்றாலே, அங்கே அக்மார்க் தமிழ் உணர்வாளர்கள் பாதிப்பேராவது இருக்கத்தான் செய்வார்கள். அந்த மேடைகளில் தமிழர்கள் தான் நாட்டை ஆளவேண்டும், நடிகர்களுக்கு இங்கே என்ன வேலை என ரஜினியை பற்றி முழங்க ஆரம்பித்து விடுகிறார் பாரதிராஜா.. எதிர்பார்த்த மாதிரியே அதற்கும் ஒரு கூட்டம் கைதட்டுகிறது..
இன்று நடைபெற்ற ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்கிற படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கும் பாரதிராஜா வந்திருந்தார்.. விழாவிற்கு வந்திருந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களில் பலரும் தமிழ் உணர்வோடு பேசினாலும் எங்கேயும் ரஜினியை பற்றி இம்மி அளவு வாய்திறக்கவில்லை. ஆனால் கடைசியாக பேசிய பாரதிராஜா மட்டும் நேரடியாக ரஜினியை பற்றி கூறாமல், மறைமுகமாக, ஆனால் ரஜினியைத்தான் சொல்கிறார் என தெரியும் விதமாக வசை பாட ஆரம்பித்துவிட்டார்.