செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகள் தினசரி மாறும்.. ஆனால் உள்ளே ஏழாம் பக்கத்தில் இடம்பெறும் செயின் பறிப்பு சம்பவங்கள் மட்டும் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது. அப்படி ஒரு நகை பறிப்பு சம்பவம் ஒரு அழகிய குடும்பத்தை எப்படி புரட்டி போடுகிறது என்பதை தான் இந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் சொல்கிறது.
தொடர்ந்து நகை பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் மைம் கோபி-ராம்ஸ் கூட்டாளிகள்.. ஆனால் இவர்களிடம் இருந்தே நகையை அபேஸ் செய்கிறார் நாயகன் துருவா. ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்க, அவரது திறமையை பார்த்து தங்களுடனேயே துருவாவையும் இணைத்து கொள்கின்றனர். கமிஷனரின் மனைவியிடம் செயின் பறிப்பில் துருவா ஈடுபடும்போது துரதிர்ஷடவசமாக அவரை காதலிக்கும் ஐஸ்வர்யா தத் கண்களில் பட்டு விடுகிறார்..
சில மாதங்களுக்கு முன் அப்பாவியாக சிலிண்டர் போடும் வேலைபார்த்து வந்த துருவா, தன்னிடம் செயினை பறித்தவனை விரட்டியடித்து செயினை மீட்ட அந்த துருவா ஏன் இப்படி செயின் பறிப்பு ஆசாமியாக மாறினார் என அதிர்ச்சியாகிறார் ஐஸ்வர்யா. இந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியான சக்கரவர்த்தியிடம் உண்மையை சொல்வதற்காக செல்லும் ஐஸ்வர்யா, துருவாவும் அவரும் நட்பாக இருப்பது கண்டு இன்னும் அதிர்ச்சியாகிறார்.
அப்பாவி துருவா செயின் பறிப்பு ஆசாமியாக மாறியது ஏன்.? அவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தையாக மாறினாரா..? இல்லை அவரை பொறிவைத்து பிடிப்பதற்கான தந்திர வலையா அது என்கிற கேள்விகளுக்கு நெகிழவைக்கும் பிளாஸ்பேக் விடை சொல்கிறது.
பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் என்பது அவர்களையும் அறியாமல் கொலை முயற்சி சம்பவமாகவும் மாறிவிடும் கொடூரத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறது இந்தப்படம். கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் நாயகன் துருவாவுக்கு ஏற்ற கச்சிதமான கேரக்டர்.. படு யதார்த்தமாக நடித்துள்ளார். ஒரு பெரிய இயக்குனரின் கையில் சிக்கினால் மிகப்பெரிய உயரத்திற்கு போகும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது.
நாயகிகளாக ஐஸ்வர்யா தத், அஞ்சனா பிரேம்.. இப்போது பிக் பாஸ் வீட்டில் பார்க்கும் துறுதுறு ஐஸ்வர்யாவா இது என நடிப்பில் வித்தியாசம் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.. பிளாஸ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த கேரக்டராகவே மாறி மனதில் நிற்கும் விதமாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அஞ்சனா பிரேம்.
என்னதான் அம்மாவாக தொடர்ந்து நடித்தாலும், அதிலும் படத்துக்குப்படம் ஏதாவது வித்தியாசம் காட்டி நம்மை ஈர்த்து விடுகிறார் சரண்யா.. இந்தப்படத்தில் வீட்டுமனை பார்ப்பதாக சொல்லி கோவில் கோவிலாக அவர் ட்ரிப் அடிக்கும் வித்தையை இனி பலர் பின்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ரொம்ப நாளைக்கு பிறகு மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்துள்ளார் ஜே.டி.சக்கரவர்த்தி.
நகைக்கடை அதிபராக ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அவரது கேரக்டரில் நச்சென பதிகிறார் ராதாரவி .. இன்னும் சில காட்சிகளை அவருக்கு நீட்டித்திருக்கலாம். சீரியஸ் கதையில் மனோபிளா தனது பங்கை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், வளவன் கூட்டணியினர் செயின் பறிக்கும் காட்சிகள் பகீர் கிளப்புகின்றனர். அதிலும் நகைக்கடைக்காரர்கள் சிலரின் மாஸ்டர் பிளானையும் அம்பலப்படுத்த இயக்குனர் ராகேஷ் தவறவில்லை. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் அச்சுவின் பின்னணி இசையும் பரபரப்பை கூட்டுகின்றன.
பெண்களையும் நகையையும் பிரிக்க முடியாது தான்.. ஆனால் இன்றைய சூழலில் மட்டுமல்ல, எப்போதுமே வெளியில் செல்லும்போது (அதிகப்படியான) நகை அணியும் ஆசையோ, நகைவாங்கும் ஆசையோ இருப்பவர்களுக்கு சுய பாதுகாப்பு ரொம்பவே முக்கியம். தங்கத்தின் விலை இவ்வளவு உயரத்தில் இருக்கும் வரை, அதன் மீது பெண்களுக்கு மோகம் இருக்கும் வரை இப்படிப்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியாது என்பதை எந்த சமரசமும் இன்றி சொல்லி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இயக்குனர் ராகேஷுக்கு தாராளமாக பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.
தகுந்த சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள இந்தப்படத்தை பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.