விஜய்கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என மூன்று நண்பர்கள் காதலில் வெவ்வேறு விதமாக பல்பு வாங்குகிறார்கள்.. அதனாலேயே சின்சியராக காதலிக்கும் காதல் ஜோடியை சேர்த்து வைப்பது என லட்சியம் (?) கொள்கிறார்கள்.. அவர்கள் கண்களில் பூவரசன்-அனுபமா பிரகாஷ் காதல் ஜோடி தட்டப்படுகிறது.. தீவிர ஜாதிப்பற்று கொண்ட, காதல் என்றாலே கண்களை உருட்டுகிற குடும்பத்தில் பிறந்த மதுரைக்கார பெண்ணான அனுபமா வீட்டிற்கே சென்று பெண் கேட்டு பூவரசனுக்கு திருமணம் முடிவு செய்வதென பிளான் பண்ணி கோவையில் இருந்து பவர்ஸ்டாருடன் ஜீப்பில் கிளம்புகின்றனர்..
இந்த மூவரும் காதலில் சொதப்பிய கதையை போகும் வழியில் கேட்டறிந்து கொள்ளும் பூவரசன் ஜெர்க் ஆகிறார். அதற்கேற்றபடி மதுரைக்கு போன இடத்தில் பிரச்சனையை வான்டட் ஆக வெத்தலை பாக்கு வைத்து அழைக்கிறார்கள் இந்த மூவரும்.. அது பூவரசன் காதலுக்கே வேட்டு வைக்கும் விதமாக திரும்புகிறது.. இறுதியில் காதல் கை கூடியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
நான்கு பேர் ஹீரோக்கள், ஆளாளுக்கு தனித்தனி காதல் கதை என்றாலும் பூவரசனை மையப்படுத்தி தான் கதை நகர்கிறது.. நான்கு ஹீரோக்களும் இயக்குனர் என்ன சொல்லி கொடுத்தாரோ அதை அச்சுப்பிசகாமல் அப்படியே செய்துள்ளனர்.. நான்கு நாயகிகளில் மெயின் நாயகியாக அனுபமா பிரகாஷ் இருந்தாலும், மற்ற மூன்று ஹீரோக்களில் ஒருவரின் காதலியாக வந்து செல்லும் கேரளக்கிளி ரூபஸ்ரீ நம்மை அதிகம் கவர்கிறார்..
யோகிபாபு அவ்வப்போது கலகலப்பூட்டினாலும் ஒரு ஹீரோவின் பிளாஸ்பேக்கோடு காணாமல் போவது ஏமாற்றமே.. படம் முழுதும் பயணிக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் காமெடி அதிகம் பண்ணாவிட்டாலும், தெரிந்த நபர் ஒருவர் நெடுந்தூர பயணத்தில் துணைக்கு வந்தால் கிடைக்கும் உள்ளூர் பீலிங்கை கொடுக்கிறார். பாந்தமான அண்ணன்-அண்ணியாக பஞ்சு சுப்பு-அம்மு நிறைவான நடிப்பு..
ஒவ்வொரு ஹீரோவும் காதலில் பல்பு வாங்கும் விஷயத்தில் ரொம்பவே காமெடியாக யோசித்துள்ளார் இயக்குனர் கேசவன். மற்றபடி காட்சிகளை எல்லாம் தனது இஷ்டத்திற்கு வளைத்துள்ளார் இயக்குனர்.. ஆனால் நம்மால் தான் வளைய முடியவில்லை.நான்கு புது கதாநாயகர்கள், புது கதாநாயகிகள், புது இயக்குனர் என எல்லாமே புதுசாக வந்தவர்கள் கதையையும் சற்று புதிதாக யோசித்திருக்கலாம்..