ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இது தொடர்பான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் பல்வேறு சமூகவலைத்தளங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்படி அளிக்கும் போது ஒரு கேள்விக்கு, ‘சர்கார்’ படத்தின் முழுக்கதையையும் சொல்லிவிட்டார் கே.பாக்யராஜ். விஜய் எதற்காக வருவார், கதை எப்படி பயணிக்கும், க்ளைமாக்ஸ் என்ன என்பதுவரை முற்றிலுமாக தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பேட்டி ‘சர்கார்’ படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ”பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு படத்தின் கதையில் இருக்கு முக்கிய சாராம்சங்கள் அனைத்தையும் எப்படி சொல்லலாம். ஒரு முன்னணி இயக்குநர் இதுக்கூட தெரியாமல் இப்படி பேசியிருப்பது உண்மையிலே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்று ‘சர்கார்’ படக்குழுவினரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்
அனேகமாக இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாக்யராஜ் மீது வழக்கு தொடுக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.