குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண ‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்.
பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் விஷயம், மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சனைக்கு நாம் மருத்துவரைப் பற்றி சிந்திப்பதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. மேலும் அவற்றை முற்றிலும் தடுக்கவும் முடியும். சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். எப்போதுமே குழந்தைகள் சில காரணங்களால் அவர்களின் பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காக தான் ‘தி திஷா ஹெல்ப்லைன்’ இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதவளிக்கும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.
ஆகையால் நீங்கள் துன்பத்தில் இருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ திஷாவின் இலவச எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்க உறுதி செய்வார்கள்.
இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.