ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் வக்கிரங்களுக்கு வழிகாட்டும் பிரபல ஒளிப்பதிவாளர்


தற்போது யூட்யூபில் web series என்கிற கலாச்சாரம் புதிதாக பரவி வருகிறது கிட்டத்தட்ட சினிமா படம் போலவே எடுக்கப்பட்டு பல எபிசோடுகளாக மாற்றப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்படுகின்றன.. அதாவது குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் வசதி இருப்பவர்கள் ஆனால் தியேட்டரில் ரிலீஸ் பண்ண வழி இல்லாதவர்கள் இதுபோன்று web series-ல் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்.

இது நேர்மையாக இருக்கும் பட்சத்தில் மிக நல்ல விஷயம் தான்.. ஆனால் இதுபோன்று யூடியூபில் பதிவேற்றப்படும் படங்களுக்கு சென்சார் இல்லை என்பது விபரீதத்தை காசாக்க நினைக்கும் சிலருக்கு இலவசமாகவே அல்வா கிடைத்தது போல என்பதையும் மறுப்பதற்கில்லை..

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா என்பவர் ஜீ 5 நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘ஆட்டோ சங்கர்’ என்கிற web series –ன் முன்னோட்டத்தை பார்த்தபோது தான், சென்சார் கட்டுப்பாடு இல்லை என்றால் படைப்பு சுதந்திரம் என்கிற பெயரில் என்ன கண்றாவி களையெல்லாம் இளைஞர் மனதில் புகுத்த போகிறார்களோ என்கிற பயம் ஏற்படவே செய்தது.

பெண்களை கொலை செய்து புதைத்தற்காக மரண தண்டனை பெற்ற கொடூர கொலைகாரன் ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாறைத்தான் web series ஆக எடுத்துள்ளார்கள்.. அவன் ஏதோ நாட்டுக்காக தியாகம் செய்து உயிர் விட்டவன் போல அவனை கதாநாயகனாக மாற்றி இந்த கருமத்தை எடுத்துள்ளார்கள்..

சரி, அது போகட்டும்.. ஆனால் அதில் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டிய மூன்று எபிசோடுகளை பார்க்க நேர்ந்தது. இதுவரை தமிழில் பல இடங்களில் அநாகரிகமாக புழங்கிவந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மிக சர்வ சாதாரணமாக இந்த வெப் சீரிஸில் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்தபோது அதிர்ச்சியின் உச்சத்திற்கு நாம் சென்று விட்டோம்..

இத்தனைக்கும் இதை இயக்கியவர் 25 வயது கூட ஆகாத ஒரு இளைஞர் தான்.. இந்த வெப் சீரியல் தொழில்நுட்ப குழுவில் நிறைய இளம்பெண்களும் பணிபுரிந்துள்ளனர் என்பது இன்னொரு அதிர்ச்சி.

இது பத்து எபிசோடுகளாக யூடியூபில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது.. சென்சார் இல்லை என்றால் என்ன கருமத்தை வேண்டுமென்றாலும் இளைஞர்கள் மனதில் புகுத்தலாமா..? ஆபாச படம் எடுத்து அதை வெளியிடுவதை விட மிக மோசமான ஒரு செயல் தான் இந்த குழுவினர் தற்போது செய்துள்ளது..

இதுகுறித்து கேள்விகளைக் கேட்டபோது தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சாவிற்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நேரிடையாகவே மோதல் ஏற்பட்டது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கிரெடிட் கார்டை வைத்து பணம் செலுத்துபவர்களும் தான் இதைப் பார்க்க முடியும் என்று இதற்கு சப்பைக்கட்டு காரணம் சொன்னார் மனோஜ் பரமஹம்சா.. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பார்க்கலாம் என்றாலும் இது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை எல்லாம் அவர்களிடம் வலுக்கட்டாயமாக புகுத்துவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது..?

எவ்வளவோ பல நல்ல விஷயங்களை திரைப்படங்கள் மூலம் சொல்ல முயற்சிக்கும்போது அது சென்சார் என்கிற அரசு எந்திரத்தின் மூலம் நசுக்கப்பட்டு சொல்லப்பட முடியாமலேயே போய்விடுகிறது. அதுபோன்று மக்களுக்கு பயனுள்ள நல்ல விஷயங்களை இப்படி வெப் சீரிஸ் மூலம் சொன்னால் அது பாராட்டுக்குரியது.. அதற்காகத்தான் படைப்பாளிகள் இப்படிப்பட்ட வெப் சீரிஸ்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..

அதை விட்டுவிட்டு பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இளைஞர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று இதுபோன்று வக்கிரமான எண்ணங்களை இளைஞர்கள் மனதில் விதைத்து அதை காசாக்க முயற்சிப்பது அப்பட்டமான ஒரு விபச்சாரம் என்றே சொல்லலாம்.. இந்த படத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள மோசமான வார்த்தைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தங்களது வீட்டில் உள்ளவர்களிடமும் திரையிட்டு காட்டி அவர்களிடம் கருத்து கேட்டிருந்தார்கள் என்றால் நிச்சயமாக செருப்படி தான் கிடைத்திருக்கும்