அதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா..? சிரிப்பு போலீஸா..? பார்க்கலாம்.
போலீஸ் வேலையில் சேர்ந்து ரவுடிகளை பந்தாட வேண்டும் என்கிற கனவில் உடம்பை ஃபிட்டாக தயார் நிலையில் வைத்திருக்கும் அதர்வாவிற்கு போலீசில் வேலை கிடைக்கிறது.. ஆனால் அவசர போலீஸ் அழைப்புக்காக உபயோகப்படுத்தும் 100 என்கிற எண்ணிற்கு வரும் அழைப்புகளை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் வேலை.
என்னடா இது என நொந்துபோய் வேலையின் மீது சலிப்படையும் சமயத்தில் அவரது 100வது அழைப்பு அவரது வாழ்க்கையே திசை மாறச்செய்யும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. அப்படி என்ன நிகழ்வு..? யார் அழைத்தது..? அதர்வா தான் இருக்கும் பணியின் எல்லைகளை மீறி அந்த சிக்கலை எப்படி எதிர்கொள்கிறார் என்பது மீதி கதை.
போலீஸ் அதிகாரி என்றாலும் போலீஸ் யூனிபார்ம் போடத் தேவை இல்லாத. ஆரம்பத்தில் தான் பார்க்கும் வேலை மீது சலிப்பு கொண்ட ஒரு போலீஸ் அலுவலராக அந்த கதாபாத்திரத்தை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார் அதர்வா. தனது சீனியர் ஆபீஸர் ஆடுகளம் நரேனிடம் டீ சாப்பிட போறேன் சார் என சொல்லி விட்டு மிகப்பெரிய சாகசங்களை செய்து வருவது புதிய உத்தி.. ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் அதர்வா..
ஹீரோயின் என்கிற பெயரளவுக்கு மட்டுமே வந்து செல்கிறார் ஹன்சிகா. ஆனால் அவரைவிட அதர்வாவின் நண்பனின் தங்கையாக வரும் ஹரிஜா நம்மை கவர்கிறார். பிஸ்டல் பெருமாளாக வரும் ராதராவி குணசித்திரத்தில் மிடுக்கு காண்பிக்கிறார். யோகிபாபுவின் காமெடியை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதேசமயம் அவரது போலீஸ் கெட்டப்பை நம்மால் சத்தியமாக ஜெரனிக்க முடியவில்லை.
அதர்வாவின் நண்பனாக வந்து சூழ்நிலை காரணமாக திசை மாறும் கேரக்டரில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் மகேஷ், பொருத்தமான தேர்வு. அதேபோல வில்லத்தனம் செய்பவர் இவர்தான் என யூகிக்க முடியாதபடி கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன். மைம் கோபி வழக்கம்போல என்றால் அவரது உதவியாளராக வந்து அடப்பாவி என்கிற விதமாக காரியங்களை செய்யும் சீனு மோகன் அசத்துகிறார்.
சாம் சி.எஸ்சின் பின்னணி இசை அதிர வைக்கிறது. குற்றவாளிகளை தேடி பிடிக்கும் சேஸிங் காட்சிகளும் குற்றத்திற்கான பின்னணியும் எதார்த்த அளவை மீறாமல் உருவாக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக சமீப காலமாக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளின் பின்னணியை இந்தப்படம் அலசியிருக்கிறது. ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகாது.