ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே இது களவாணி படத்தின் தொடர்ச்சி அல்ல என எச்சரிக்கும் இயக்குனர் நம்மை களவாணியின் புதிய கதைக்கு தயார்படுத்தி விடுகிறார்.
வழக்கம் போல இந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் நண்பன் விக்னேஷ் காந்த்துடன் சேர்ந்துகொண்டு சிக்கியவர்களை ஏமாற்றிக்கொண்டு வண்டி ஓட்டுகிறார் விமல். இந்தநிலையில் மாமன் மகள் ஓவியா மேல் காதல் ஏற்படுகிறது.. அந்த சமயத்தில் ஊருக்குள் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் விமலின் மாமன்கள் இருவரும் சமபலத்துடன் எதிர் எதிராக மோதுவதற்கு தயாராகின்றனர் இந்த தேர்தலை பயன்படுத்தி தானும் வேட்புமனு தாக்கல் செய்து, அதை வாபஸ் பெறுவதற்காகக இதில் ஏதோ ஒரு அணியிடம் இருந்து கணிசமாக பணம் கறக்கலாம் என நினைக்கிறார் விமல்.
இதற்கு ஆகும் செலவுகளையெல்லாம் கஞ்சா கருப்பு மேல் சுமத்துகிறார்.. ஆனால் இவர் எதிர்பார்த்தபடி இரண்டு தரப்பில் யாரிடமும் இருந்து பணமும் கிடைக்கவில்லை. சரி.. ஓவியா உசுப்பேத்தியதால் தேர்தலில் நிற்கலாம் என நினைத்தால் சொந்த தந்தையே ஓட்டு போட மாட்டார் என்கிற நிலை. இந்த நிலையில் தேர்தலில் நிற்கும் ஓவியாவின் தந்தை ஒவியாவுடனான காதலை கைவிட கோரி, தான் போட்டியிடாமல் ஒதுங்கி விமலுக்கு தன் ஆதரவை தருகிறார்.
விமலும் தன் காதலை விட்டுக்கொடுத்து தேர்தலில் போட்டியிடுகிறார். ஏற்கனவே ஊருக்குள் நல்ல பெயர் வாங்கிய தனது மாமன் துரை சுதாகரை எதிர்த்து விமலால் ஜெயிக்க முடிந்ததா ஜெயித்தாலும் தோற்றாலும் தனது காதலி ஓவியாவை கொடுத்த வாக்கிற்காக விட்டுக் கொடுத்தாரா என்பது மீதி கதை
பத்து வருடத்திற்கு பிறகும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே களவாணித்தனம் பண்ணு விமலை இந்தப் படத்திலும் பார்க்க முடிவது ஆச்சரியம்.. தோற்றம் முதல் மொழி என எதிலும் பெரிய மாறுதலை பார்க்க முடியவில்லை.. அதேசமயம் களவாணி முதல் பாகத்தில் துருதுருவென வந்து ரசிக்க வைத்த ஓவியாவிற்கு, இந்தப்படத்தில் படிப்பதற்கான வாய்ப்பு சற்று குறைவுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மீதான ரசிகர்களின் பார்வையே மாறி இருக்க, அதற்கு ஏற்பத் அவரது நடிப்புக்கு தீனி போட தவறியிருக்கிறார்கள்.
விமலின் பெற்றோராக இளவரசு மற்றும் சரண்யா.. அதே கோபம் மற்றும் பாசம் இதில் சற்றும் குறையவில்லை.. கஞ்சா கருப்பு முதல் படத்தைப் போல இதிலும் பலிகடாவாகும் காட்சிகள் செம கலாட்டா. இந்த படத்தில் அவரது காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.. ஆனால் விக்னேஷ்காந்த்திற்கு சினிமாவிற்கான காமெடி என்னவென்பது இப்போது வரை புரியவில்லை என்பது நன்றாக தெரிகிறது.. ஏதோ விமல், கஞ்சா கருப்பு உடன் சேர்ந்து பெயரளவிற்கு ஒப்பேற்றுகிறார் மனிதர்.
படத்தில் வில்லன்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகள் மட்டுமே கதையில் வில்லனாக காட்டப்படுகிறது. இது ஒரு புது முயற்சி தான் விமலின் மாமனாக வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஓரளவு நம் கவனத்தை ஈர்க்கிறார்.. அடுத்தடுத்த படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.. இந்த படத்திற்கு மயில்சாமியும் அவரது காமெடியும் மிகப்பெரிய அளவில் கை கொடுத்து இருக்கிறார்கள்.
வழக்கமாக பல படங்களில் இடைவேளைக்கு முன்பு விறுவிறுப்பாகவும் இடைவேளைக்குப் பின்னர் போர் அடிப்பது போன்றும் இருக்கும்.. இந்த படத்தில் அப்படியே உல்டாவாக இடைவேளைக்கு பின்பு படம் இறுதிவரை தேர்தல் களத்தில் வைத்து சுவாரசியம் கூட்டி இருக்கிறார் இயக்குனர் சற்குணம். விமலுக்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் வாக்குகளை தன் பக்கம் திருப்புவதற்காக அவர் செய்யும்ம் கடைசி நேர தகிடுதத்தங்கள் ரசிக்கவைக்கின்றன. முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இது கொஞ்சம் மாற்று குறைவுதான் என்றாலும் இந்த களவாணியையும் ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர் சற்குணம்.