‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ விருது – டுவிட்டரில் மத்திய அரசுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி


இந்தியாவும். ரஷ்யாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே விருது” வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”.

இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் மத்திய மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட பொன்விழாவில் எனக்கு கவுரவம் மிக்க சிறப்பு விருதை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.