சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார்கள் முருகன் என்ற விஜய் சேதுபதியும் அவருடைய நண்பரான சூரியும். அப்போது பப் ஒன்றில் ராசி கன்னாவை பார்க்கிறார் நாயகன் விஜய் சேதுபதி. ஆனால் அந்த முதல் சந்திப்பில் இருவருக்குமிடையில் சிறு மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் புகைப்பட கலைஞரான ராசி கன்னாவுக்கு ஒரு புராஜக்ட் கிடைக்கிறது. அது விஜய் சேதுபதி வசிக்கும் பகுதியை புகைப்படம் எடுக்கும் புராஜக்ட். இருவரும் சந்திக்க வாய்ப்பாக அமைகிறது அந்த புராஜக்ட். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது.
ராசி கன்னாவின் தந்தை ரவி கிஷன் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி. அவர் தனது மகள் விஜய் சேதுபதியை காதலிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
விஜய் சேதுபதியின் பெயர் முருகன் இல்லை சங்கத்தமிழன் என்று சொல்லி திருப்பத்தை ஏற்படுத்துகிறார் ராசி கன்னாவின் தந்தை. சங்கத்தமிழன் யார்? அவரின் பின்னணி என்ன? அவரை பார்த்து ராசி கன்னாவின் தந்தை அஞ்சுவது ஏன்? என்பதே மீதிக்கதை.
வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி இதில் கமர்ஷியல் ஹீரோவாக நடித்துள்ளார்.
சங்கத் தமிழனாக நடிக்கும் போது கோபத்துடனும், ஆவேசத்துடன் நடித்துள்ளார். முருகன் கதாபாத்திரத்தில் கலகலப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் நடித்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே டயலாக் டெலிவரியிலிருந்து உடல் மொழி வரை வித்தியாசம் காட்டி அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி.
ராசி கன்னா வழக்கமான கதாநாயகியாக வந்து காதலிக்கும் பணியை செய்கிறார். இன்னொரு கதாநாயகி நிவேதா பெத்துராஜ் காதலிப்பதோடு மட்டும் அல்லாமல் விஜய்சேதுபதிக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். சூரியின் காமெடி படத்தை கலகலப்பாக நகர்த்துகிறது. இரண்டாம் பாதியில் வரும் அந்த தொட்டி ஜெயா காமெடி வயிறை பதம் பார்க்கிறது.
நாசர், ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், லல்லு, ஸ்ரீமன், மைம் கோபி, ஜான் விஜய் ஆகியோர் தங்களுக்குரிய கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். அசுதோஷ் ராணா, ரவி கிஷன் இருவரும் வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள்.
இயக்குனர் விஜய் சந்தர், திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. விவேக்- மெர்வின் இசையில் கமர்சியல் தூக்கல். பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.
சங்கத்தமிழன் மூலமாக ரசிகர்களுக்கு கமர்ஷியல் விருந்து படைத்துள்ளார் விஜய் சேதுபதி.