காளிதாஸ் – விமர்சனம்


படத்தின் நாயகன் பரத் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. மனைவி மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்,

இந்த சூழ்நிலையில் ஒரு பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் நாயகன் பரத்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இதே போன்று சில பெண்கள் இறந்து போகின்றனர். இதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையில் தீவிரமாக களம் இறங்குகிறார் பரத். இது கொலையா? அல்லது தற்கொலையா? என தீவிரமாக ஆராயத் தொடங்குகிறார்.

நாயகன் பரத்திற்கு அசிஸ்டெண்ட் கமிஷ்னரான சுரேஷ்மேனன் இந்த வழக்கை ஆராய அறிவுரைகள் வழங்குகிறார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறார் பரத்.

இரவு, பகல் பாராமல் இந்த சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய கடுமையாக உழைக்கிறார் பரத். இதனால் அவரது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் போகிறது.

இதுவே பரத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட காரணமாக அமைகிறது.

இறுதியில் பெண்களின் இறப்பிற்கான காரணத்தைக் கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காளிதாஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள பரத், காவல்துறை அதிகாரியாக அசத்தலாக நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

அழகு, பதுமையுடன் இருக்கும் நாயகி அன் ஷீத்தல் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

சுரேஷ் மேனன் தனது யதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.

ஆதவ் கண்ணதாசன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சிரிக்க வைக்கிறது.

படத்தின் இயக்குநரான ஸ்ரீ செந்தில் தனது முதல் படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க விடாமல் மிகச் சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். கிளைமாக்சில் யாருமே எதிர்பாராத வகையில் அமைத்துள்ள டுவிஸ்ட் மிகச் சிறப்பு.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். சுரேஷ் பாலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘காளிதாஸ்’ திரைப்படம் விறுவிறுப்பின் உச்சம்.