உற்றான் – விமர்சனம்


படத்தின் நாயகன் ரோஷன் உதயகுமார் ஒரு கல்லூரி மாணவர். இவருடன் படிக்கும் சக மாணவராக கானா சுதாகர். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நாயகன் ரோஷன் உதயகுமார் மற்றும் கானா சுதாகர் இருவரையும் தனது சொந்த மகன்கள் போல் பாவித்து பாசத்துடன் வளர்த்து வருகிறார் கானா சுதாகரின் அக்கா பிரியங்கா.

நாயகன் ரோஷன் உதயகுமார் மிகவும் தைரியமானவர். இந்நிலையில் கல்லூரியில் மாணவர் தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் நாயகன் ரோஷன் உதயகுமார் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறார். இது சிலருக்கு பிடிக்காமல் போகிறது. இதனால் ரோஷனுக்கு எதிரிகள் உருவாகிறார்கள்.

ஊர் பெரியவர் வேல.ராமமூர்த்திக்கும் ரோசனை பிடிக்காமல் போகிறது. அந்தப் பகுதியில் மற்றொரு பெரிய ஆளாக வலம் வருபவர் ரவிசங்கர். இவர் ரோசனை அவருடைய எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில் ரோஷன் படிக்கும் கல்லூரியை இருபாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றுகிறார்கள். இங்கு படிக்க வரும் நாயகி கோமலி மீது ரோஷன் காதல் வயப்படுகிறார். இவர்களுடைய காதல் நாயகியின் தந்தை மதுசூதனநுக்கு தெரியவருகிறது. அவர்களுடைய காதலை எதிர்க்கிறார் தந்தை மதுசூதனன்.

இப்படி அனைவருடைய பகையையும் சம்பாதித்து இருக்கும் நாயகன் அதிலிருந்து எப்படி தப்பித்தார்? எப்படி அவர்களை சமாளித்தார்? நாயகியை கரம் பிடித்தாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் ரோஷன் முதல் படத்திலேயே நடனம், சண்டை, காதல் என அனைத்திலும் தனது தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி கோமலி கல்லூரி மாணவி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிசங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக வரும் பிரியங்காவும் கண்களாலேயே பேசுகிறார்.

வில்லன்கள் வேல.ராமமூர்த்தி மற்றும் மதுசூதனன் தங்களது வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டுகின்றனர்.

கல்லூரியை மையமாக வைத்து அரசியல் கதையையும் புகுத்தி நாயகனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜா கஜினி. முதல் பாதி கல்லூரியில் நடக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக புகுத்தியுள்ளார் இயக்குனர்.

என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் கல்லூரியில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து வந்துள்ளது இந்த “உற்றான்” திரைப்படம்.