அடவி – விமர்சனம்


கோத்தகிரி மலைப்பகுதியில் சப்வே என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூகவிரோதிகள் சிலரை கொடூரமாக கொல்கிறது.

ஆனால் காவல்துறையினர் இதை நம்ப மறுக்கின்றனர். அந்த மலைவாழ் மக்களை பிடித்து வந்து விசாரிக்கின்றனர். அப்போதுதான் வினோத் கிஷன், அம்மு அபிராமியின் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்கு அங்கு வாழும் மக்களை மனோகரன் கும்பல் விரட்ட முயற்சி செய்கிறது. ஆனால் அந்த மலைவாழ் மக்களின் கிராமத்தை வினோத்தும், அம்மு அபிராமியும் இணைந்து அதற்கு எதிராக மக்களை சேர்த்துக்கொண்டு போராடுகின்றனர். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகன் வினோத் கிஷன் செண்டிமெண்ட் காதல் மற்றும் ஆக்சன் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மலைவாழ் இளைஞனாகவே வாழ்ந்துள்ளார்.

அம்மு அபிராமி சிலம்பம் சுற்றும் காட்சிகளில் வீரத்துடன் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கிறார்.

வள்ளியின் தோழியாக வரும் விஷ்ணுபிரியாவும் தனது சிறப்பான நடிப்பை வழங்கி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

சரத் ஜடாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. மலைவாழ் மக்களின் இசையையும் பாடலையும் படத்தில் பயன்படுத்தியது பொருத்தம்.

அடவி என்றால் காடு மட்டும் அல்ல. அதுதான் வாழ்க்கை. அதை அழிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை நாமே குழிதோண்டி புதைத்துக்கொள்கிறோம் என்ற கருத்தை வலுவாகவும் வணிக ரீதியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

வனம் என்னும் இயற்கை அளித்த வரத்தை சுயலாபத்துக்காக சிதைக்க நினைப்பவர்களுக்கு எதிரான மலைவாழ் மக்களின் போராட்டமே அடவி.

மொத்தத்தில் ‘அடவி’ மலைவாழ் மக்களின் போராட்டம்.