திருமணம் குறித்து நடிகை அனுஷ்கா பேட்டி!


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தனது திருமணம் மற்றும் இதர விஷயங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது,

“எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனது சொந்த வாழ்க்கையில் சிலர் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை. நான் ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்றனர். இப்போது விவாகரத்து ஆனவருடன் திருமணம் என்று வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

2 ஆண்டுகள் இடைவெளிவிட்டு ‘நிசப்தம்’ படத்தில் நடிக்கிறேன். பாகுபலி, பாகமதி படங்களில் கஷ்டப்பட்டு நடித்தேன். படப்பிடிப்பில் காயங்கள் ஏற்பட்டன. அந்த காயங்கள் ஆறத்தான் இந்த இடைவெளி ஏற்பட்டது. நடிக்க வந்து 15 ஆண்டுகள் எப்படி கடந்தது என்று புரியவில்லை. எடையை குறைத்து வருகிறேன். குண்டாக இருக்கிறோமா, ஒல்லியாக இருக்கிறோமா என்று வெளி தோற்றத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எல்லோரையும் நல்லா இருக்கிறீர்களா? என்றுதான் கேட்போம். இப்போது ஏன் ஒல்லியாக இருக்கிறாய்? ஏன் கறுத்து விட்டாய்? என்று கேட்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறாயா? ஆரோக்கியமாக இருக்கிறாயா? என்று கேட்பது இல்லை. உடலை பற்றிதான் கேட்கிறார்கள். இப்போது நிறைய பேருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் இப்படி கேட்பதுதான். நாம் எப்படி இருக்கிறோமோ? அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளி அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்தன்மையை இழந்து விடக்கூடாது”.