மிருகா – விமர்சனம்

விதவை மற்றும் விவாகரத்தான வசதியான வீட்டு பெண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி, முடிந்தவரை பணத்தை கொள்ளையடிப்பவர் ஸ்ரீகாந்த். இதற்காக பல கொலைகளை செய்யும் கொடூர குணம் கொண்டவர். அவரை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றும் பெண், அவர் பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு பிளாக்மெயில் செய்கிறார். அதாவது தனது சகோதரி ராய்லட்சுமிக்கும் இன்னொரு சகோதரிக்கும் சொத்துகளை எல்லாம் தனது தந்தை எழுதி வைத்து விட்டார் என்றும், ராய்லட்சுமியிடம் இருக்கும் மொத்த பணத்தையும் தனக்கு கொண்டுவந்து கொடுக்கும்படியும் நிபந்தனை விதிக்கிறார்.

ஊட்டியில் இருக்கும் ராய்லட்சுமியின் இடத்திற்கு செல்லும் ஸ்ரீகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரை திருமணமும் செய்துகொள்கிறார். ஒருகட்டத்தில் ராய் லட்சுமி ரகசிய அறையில் சேர்த்து வைத்திருக்கும் பணம் பற்றிய விபரத்தையும் தெரிந்துகொள்கிறார்.

ஆனால் எதிர்பாராமல் அவர் செய்த ஒரு தவறின் மூலம் போலீசுக்கும் ராய்லட்சுமிக்கும் அவர் யார் என்கிற உண்மை தெரிய வருகிறது. ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போய், ஸ்ரீகாந்த் உஷாராகி ராய்லட்சுமியை காட்டு பங்களாவில் சிறைவைகிறார். இதற்கிடையே எஸ்டேட் பகுதியில் உலாவரும் புலி ஒன்றை பிடிப்பதற்காக ஸ்ரீகாந்த் வைத்த கூண்டில் புலி சிக்குகிறது.

பூட்டிய பங்களாவில் இருக்கும் லட்சுமிராய் உள்ளிட்டோர் மீது புலியை ஏவுகிறார் ஸ்ரீகாந்த். நிஜமான மிருகம் மற்றும், மிருகத்தனமான குணம் கொண்ட ஸ்ரீகாந்த் இருவரிடம் இருந்தும் ராய்லட்சுமி தப்பித்தாரா என்பது மீதிக்கதை.

முழுக்க முழுக்க வில்லத்தனம் கொண்ட கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த்தை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. அவர் ஓரளவு பீக்கில் இருந்த சமயத்தில் இந்தப்படம் வெளியாகி இருந்தால் இந்தப்படம் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று இருக்குமோ என்னவோ..? வில்லத்தனம் என்பதற்காக வித்தியாசமான மேனரிசங்களை பயன்படுத்தாமல் ஓரளவு யதார்த்தம் காட்டி நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

வாழக்கியில் இன்னொரு அன்புக்காக ஏங்கி நம்பிக்கை துரோகத்துக்கு பலியாகும் கதாபாத்திரத்தில் ராய்லட்சுமி பொருத்தமான தேர்வு.. பாந்தமான நடிப்பு.. அவரது அமைதி தங்கையும் சரி, அடாவடி தங்கையும் சரி கனகச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக ராய்லட்சுமியின் தங்கையும் அவரது செகரட்டரியும் கூட வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார்கள். அதேசமயம் வில்லனாகவே பார்த்து வந்த தேவ் கில் இதில் நல்ல போலீஸ் அதிகாரியாக வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

எஸ்டேட் மக்களை அச்சுறுத்தும் புலியை ஸ்ரீகாந்த் பிடிக்க முயற்சிப்பது என்பது இடைச்செருகலாக தெரிந்தாலும் அதை படமாக்கிய விதம் நன்றாகவே இருக்கிறது. அடுத்தவரின் உயிரை அநாசயமாக எடுக்கும் ஸ்ரீகாந்த், நல்ல பெயர் வாங்குவதற்காக புலியின் தாக்குதலுக்கு ஆளாகும் அளவுக்கு ரிஸ்க் எடுப்பதில் லாஜிக் இல்லை. அதேபோல கிளைமாக்ஸில் வீட்டுக்குள்ளேயே புலியிடம் இருந்து தப்பிக்க ராய்லட்சுமி முயற்சிப்பது திக்திக் என இருந்தாலும் காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். புலியை விட வேகமாக ராய்லட்சுமி பாய்ந்து குழந்தையை காப்பாற்றுவது எல்லாம் காதுகளில் முழம் கணக்கில் பூச்சுத்தல் ரகம்.

ஆனாலும் என்னவோ படம் பார்க்க வந்தவர்களை, இந்த மிருகா ஏமாற்றாமல் போரடிக்காமல் கொடுத்த காசுக்கு த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்து தான் அனுப்பி வைக்கிறது