வரும் வெள்ளிகிழமை தீதும் நன்றும் என்கிற படம் வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளதுடன் இந்தப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவராகவாரகவும் நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக ஈசன் என்பவர் நடித்துள்ளார். கதாநாயகிகளாக மலையாள திரையுலகை சேர்ந்த அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் அபர்ணா பாலமுரளி சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகிவிட்டார். அதேபோல மலையாளத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்துவரும் லிஜோமோள், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு தமிழில் இடம் கிடைத்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இப்படி பெரிய படங்கள் கிடைப்பதற்கு ஆதாரமாக இருந்தது இந்த தீதும் நன்றும் படம் தான்.
இயக்குனர் ராசு ரஞ்சித், மலையாளத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக அறிமுகமான, ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் இவர்களது சிறந்த நடிப்பை பார்த்து விட்டுத்தான், தமிழில் தான் இயக்கும் தீதும் நன்றும் படத்தில் இவர்களை ஒப்பந்தம் செய்தார். தமிழில் முதல் வாய்ப்பு என்பதால் இவர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்து முடித்து விட்டார்கள்.
ஆனால் அதன்பிறகு சூரரைப்போற்று படம் வெளியாகி வெற்றி பெற்றதால் அபர்ணா பாலமுரளி தன்னை ஒரு நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு முன்னணி கதாநாயகியாக நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார். அதனால் தான், தற்போது தீதும் நன்றும் படம் வெளியாக இருக்கும் சூழலில், படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.
சொல்லப்போனால் சூர்யாவின் ஜோடியாக நடித்தவர் என்பதால், தீதும் நன்றும் படத்தின் புரமோஷன் நிகழ்சிகளில் இவர் கலந்துகொண்டு இருந்தால் இந்தப்படத்திற்கு அது ரொம்பவே ப்ளஸ் பாயின்ட் ஆக அமைந்திருக்கும்.. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்துகொள்ள வந்த அபர்ணாவுக்கு, இந்தப்படத்திற்காக ஒரு மணி நேரம் கூட ஒதுக்கி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை…
இன்று இந்தப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் நாயகிகள் இருவரும் வரவில்லை. அபர்ணாவாவது நான் சூர்யா பட கதாநாயகி என பந்தா காட்டியுள்ளார். ஆனால் இரண்டாம் கட்ட நடிகையான லிஜோமோள் ஜோஸ், அதைவிட ஒரு படி மேலே போய், அபர்ணாவே வரவில்லை என்பதால், நான் மட்டும் ஏன் வரவேண்டும் என அவரும் வர மறுத்து விட்டாராம். பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் விடாத குறையாக, இவர்களது அடாவடிகளை கூறி, தனது குமுறல்களை கொட்டி விட்டார் இயக்குனர் ராசு ரஞ்சித்.