கணேசாபுரம் – விமர்சனம்

சின்னா, ராஜ்பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் திருடுவதையே தொழிலாக கொண்ட திருட்டு கூட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த திருட்டு கூட்டத்தை வழிநடத்துகிறார், வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் பசுபதி ராஜ். தனது ஊரிலேயே திருடி விட்டார்கள் என ஊர் தலைவர் கயல் பெரேரா, சின்னா மற்றும் அவர் நண்பர்கள் மீது பஞ்சாயத்தில் கோபப்பட. எதிர்பாராத விதமாக அவரை கைநீட்டி அறைந்து விடுகிறார் சின்னா. இதனால் கோபமான அவரது மகன் ராஜ்சிம்மனும் அவரது தம்பியும் சின்னாவை கொல்ல துடிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் திருடப்போன இடத்தில் ஒரு குடும்பத்தையே தற்கொலையில் இருந்து காப்பாற்றுகிறார் சின்னா. அந்த வீட்டு இளம்பெண் ரிஷா, சின்னா மீது காதலாகி விடாப்பிடியாக துரத்துகிறார். முதலில் கல் மனதாக இருந்தாலும், போகப்போக காதலில் இளகுகிறார் சின்னா. இதனால் திருடுவதில் அவரது கவனம் குறைகிறது. இதை அறிந்த ஜமீன்தார் சின்னா மீது கோபமாகிறார்.

சின்னாவின் நண்பர்கள் இருவரும், தங்கள் நண்பன் காதலியுடன் எங்காவது சென்று நலமாக வாழட்டும் என, சின்னாவை வெறுப்பது போல் நடித்து ஒதுக்குகின்றனர். அதை உண்மையென்று நம்பிய சின்னாவும் வேறு வழியின்றி காதலியுடன் வெளியூர் கிளம்புகிறார். போகும் இடத்தில் குடித்தனம் நடத்த பணம் வேண்டுமென்று கடைசியாக ஒரு வீட்டில் திருட செல்கிறார் சின்னா.. ஆனால் இந்த முறை நேரமும் விதியும் அவருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கைகோர்க்கின்றன. சின்னாவின் முயற்சி பலித்ததா..? எதிரிகளை மீறி காதலர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக்கதை.

சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து ஒரு லிட்டர் எடுத்துக்கொண்டு, அதில் பருத்தி வீரன் 100 மிலி, அரவாண், ராசைய்யா ஆகியவற்றில் தலா 250 மிலி ஆகியவற்றை சரியாக மிக்ஸ் செய்தால் கிடைக்கும் புதிய படம் தான் இந்த கணேசாபுரம். அந்தளவுக்கு படத்தில் சின்னா, ராஜ்பிரியன் மற்றும் காசிமாயன் கதாபாத்திரம் மூன்றுமே ஜெய், சசிகுமார், கஞ்சா கருப்பு ஆகியோரை தவறாமல் காட்சிக்கு காட்சி நினைவூட்டுகிறார்கள். குறிப்பாக காசி மாயனின் டயலாக் டெலிவரி அப்படியே கஞ்சா கருப்பை காது முன் நிறுத்துகிறது.

நாயகன் சின்னா துறுதுறுவென இருக்கிறார். பல இடங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனை பார்ப்பது போலவே அவரது சாயல் அமைந்திருக்கிறது. இது ஒருவகையில் அவருக்கு பிளஸ் தான். ஆனால் எந்நேரமும் வேட்டியை மடித்து கட்டுவது, பீடியை புகைப்பது என அவரது மேனரிசம் சற்று எரிச்சலையும் தரவே செய்கிறது.

நாயகி ரிஷா.. நூறு சதவீதம் கிராமத்து முகம். சின்னாவை விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன… நாயகனின் நண்பர்கள் ராஜ்பிரியன், காசிமாயன் இருவரில் ராஜ்மாயன் பாஸ்மார்க்கை தாண்டி விடுகிறார். காசிமாயனின் டூயட் காட்சி காமெடி இல்லாத குறையை போக்குகிறது. வில்லத்தனம் காட்டுவதில் ராஜசிம்மனும் பசுபதி ராஜும் வித்தியாசம் காட்டி இருக்கின்றனர்/

ஹீரோவின் நண்பர்கள் இருவரும், எங்களை தாண்டி சின்னாவை யாரும் நெருங்க முடியாது என அடிக்கடி உதார் விடுகின்றனர்.. ஆனால் அடுத்தடுத்து இரண்டு காட்சிகளில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது நல்ல காமெடி. அதேசமயம் சண்டை காட்சிகளை பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக எடுத்திருக்கிறார்கள். ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சபாஷ். .

இப்படி, பார்த்த படங்களின் சாயலிலேயே ஒரு படத்தை உருவாக்கி இருந்தாலும் அதை ஓரளவு நேர்த்தியாகவே செய்திருக்கிறார் இயக்குனர் வீராங்கன். அதற்காக (மட்டும்) அவரை பாராட்டலாம்.