கல்யாணம் முடித்த கையோடு தேனிலவு கிளம்பி செல்கிறார்கள் கெவினும் சாரா தேவாவும்.. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல முதலிரவுக்காக அலை பாய்கிறார் கெவின்.. ஆனால் சாராவோ, ஒருவரை ஒருவர் பழகி, மனப்பூர்வமாக புரிதல் ஏற்பட்ட பின்னர் தான் முதலிரவு என்கிறார்.. தேனிலவு நாட்கள் வீணாகி போகிறதே என்கிற வேதனையில் அதிரடியாக ஒரு முடிவெடுக்கிறார் கெவின். அதிர்ச்சியடையும் சாரா கெவினின் வழிக்கு வந்தாரா..? இல்லை தானும் பதிலுக்கு அதிரை முடிவை எடுத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
பொதுவாகவே ஒரு படம் என்றால் ஹீரோவுக்கு விதவிதமான பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும். படம் முழுதும் அதை சமாளித்துக்கொண்டே இருப்பார். ஆனால் இந்தப்படத்தின் நாயகன் கெவினுக்கு தனக்கு முதலிரவு நடக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. இதையே ஒரு ரிசார்ர்டில் வைத்து முழுப்படமாக எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும்.
கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அப்பாவி, அலைஞ்சான் கேஸ் என இரண்டுவித முகபாவங்களையும் காட்ட முயற்சித்திருக்கிறார். போகப்போக தேறிவிடுவார் என நம்புவோம்.. வித்தியாச சிந்தனை கொண்ட நாயகியாக சாரா தேவா. ஜாடிக்கேத்த மூடி போல கெவினுக்கு ஏற்ற ஜோடிதான்.
ரிசார்ட்டிலேயே படம் முழுவதும் நகர்வதால் ரசிகர்களுக்கு போரடிக்க கூடது என நடிகர் அப்புக்குட்டியும் காதல் அருணும் காமெடி என்கிற பெயரில் ஏதேதோ பண்ணுகிறார்கள்,, க்ளைமாக்சுக்கு சற்று முன்னதாக வந்தாலும் ஆர்.சுந்தர்ராஜன் சற்றே கலகலப்பூட்டுகிறார்.
ஏம்மா இதெல்லாம் ஒரு பிரச்சனையாம்மா என்னாம்மா இப்படி பண்றீங்களேம்மா என கேட்க தோன்றும் விதமான ஒரு சின்ன பிரச்சனையை கையில் எடுத்து இரண்து மணி நேர படமாக மாற்றிக்காட்டிய இயக்குனர் குஷால் குமாரை எங்கு பார்த்தாலும் கையெடுத்து கும்பிட வேண்டும்.