யானை ; திரை விமர்சனம்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர், ராதிகா, ராமசந்திர ராஜு, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் தான் யானை.

யானையின் கதைக்களம் ராமேஸ்வரம். அங்கு வசிக்கும் ஒரு பெரிய குடும்பம் அருண் விஜயுடையது. வீட்டு தலைவராக ராஜேஷ்,அவருடைய மறைந்த மூத்த மனைவியின் மகன்கள், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ். இரண்டாவது மனைவி ராதிகாவின் மகன் அருண் விஜய். அண்ணன்கள், அண்ணிகள், குழந்தைகள் என பாசமான குடும்பமாக வாழ்ந்தாலும், அண்ணன்களால் பாரபட்சமாக நடத்தப்படுகிறார் அருண் விஜய். இருந்தாலும் இந்த குடும்பத்துக்கு பாதுகாவலனாக அருண் விஜய் உள்ளார்.

இந்தநிலையில், சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி ஒரு முஸ்லிம் இளைஞரை காதலித்து அவருடன் ஓடி விடுகிறார். அம்முவின் காதல் பற்றி தெரிந்தும் அதை மறைத்ததற்காக வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார் அருண்விஜய்.

அம்மு அபிராமி எங்கு சென்றார் என கண்டுபிடிக்க முயல்கிறார் அருண் விஜய், ஆனால் ஜாதி, கௌரவம் என வாழும் சமுத்திரக்கனி மகளை கண்டுபிடித்து கொல்ல துடிக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் யானையின் மீதிக் கதை.

அதிரடியான குணம், குடும்பத்துக்காக கொலை செய்ய கூட துணியும் குணம், குடும்பத்தின் மீது உயிரே வைத்திருப்பது என ஹரியின் படங்களில் வரும் ஹீரோக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கதாப்பாத்திர வடிவமைப்பு இருக்கும், இந்த படத்தில் அருண்விஜய்யின் கதாப்பாத்திரமும் அப்படிதான்.

ஆக்சன் காட்சிகள் ஆகட்டும், செண்டிமெண்ட் காட்சிகள் ஆகட்டும் அருண்விஜய் அசத்தியிருக்கிறார். குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் ப்ரியா பவானி ஷங்கர். அலட்டல் இல்லாத நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

கே.ஜி.எப் வில்லன் ராமசந்திர ராஜுவுக்கு இரண்டு வேடம். வில்லனாக மிரட்டியிருக்கிறார். சமுத்திரக்கனி, ராதிகா, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா என அனைவரும் அவரவர் கதாப்பாத்திங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

யோகி பாபு படம் முழுவதும் வந்தாலும், சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். ஆனால் யோகிபாபு பேசும் ஒரு வசனம் நம் அனைவரையும் ஈர்க்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசை ரசிக்க வைக்கிறது. ராமேஸ்வரத்தை நம் கண் முன்னே நிறுத்திவிட்டார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.

மொத்தத்தில் யானை குடும்பத்துடன் பார்க்கலாம்.