டி பிளாக் ; திரை விமர்சனம்

கல்லூரி ஒன்றில் பெண்கள் தொடர்ச்சியாக பலியாகிறார்கள். ஏன், எதற்கு என்பதை த்ரில்லர் கதையாக சொல்ல முயன்றிருக்கிறது டி – பிளாக்.

அடர்ந்த காடுகளுக்கு நடுவே ஒரு பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் ஐந்து மணிக்கு மேலே யாரும் வெளியே செல்லக்கூடாது, மொட்டை மாடிக்கு போகக்கூடாது என பல கண்டிஷன்கள். அப்படிப்பட்ட அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் காணாமல் போய்விடுகின்றனர். அவர்களை சிறுத்தை அடித்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் அருள்நிதியின் வகுப்பு மாணவியும் அதே போல இறந்து போகிறார். இதற்கு என்ன காரணம் என கண்டுபிடிக்க அருள்நிதியும், அவரது நண்பர்களும் முயல்கின்றனர். மாணவிகளை கடத்திக் கொள்வது ஒரு சைக்கோ என தெரிய வருகிறது. அவனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஆனது, இந்த கொலைகளை செய்வது யார், எதற்காக என்பதை கண்டுபிடித்தார்களா என்பது தான் இந்த படத்தின் மீதிக் கதை.

எருமை சாணி யூட்யூப் புகழ் விஜய், இந்த படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். காலேஜ் படங்கள் என்றாலே கலகலப்பாக தான் இருக்கும், ஆனால் இதை த்ரில்லர் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார்.

அருள்நிதி காலேஜ் மாணவராக சரியாக பொருந்தியிருக்கிறார். அருள்நிதி காதலியாக வரும் அவந்திகா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் ரமேஷ்கண்ணா, தலைவாசல் விஜய் என சீனியர் நடிகர்கள் இருந்தாலும் யாரும் பெரிதாய் மனதில் நிற்கவில்லை. கரு.பழனியப்பன் சில நிமிடங்களே வந்தாலும், அவர் பேசும் அந்த நக்கலான வசனம் ஈர்க்கிறது.

கல்லூரிக்குள் வந்து செல்லும் அமானுஷ்ய மனிதர் என்னும் சுவாரஸ்ய ஒன்லைனை மட்டும் வைத்துக்கொண்டு அதைச் சுற்றி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

கௌசிக் கிரிஷின் பின்னணி இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.