பொன்னியின் செல்வன் 2 ; விமர்சனம்

அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதி திரைக்கு வந்துள்ளது.

இலங்கையில் இருந்து தஞ்சை வரும் வழியில் அருண்மொழி வர்மனான பொன்னியின் செல்வனும் (ஜெயம் ரவி), வந்தியத்தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்க, ஊமை ராணியின் ஆச்சரிய அறிமுகத்துடன் முதல்பாகத்தை முடித்திருப்பார் இயக்குநர் மணிரத்னம்.

இரண்டாம் பாகத்தில், பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றுகிறார். இன்னொரு பக்கம் சோழர் குலத்தை அழிக்க பாண்டிய ஆபத்துதவிகளோடு இணைந்து சூழ்ச்சியில் இறங்குகிறார் நந்தினி (ஐஸ்வர்யா ராய்). அச்சூழ்ச்சி அறிந்தும் நந்தினியைத் தேடிச் செல்லும் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? வந்தியதேவன் மீது குந்தவை (த்ரிஷா) கொண்ட காதல் என்னவானது? உண்மையில் நந்தினி யார்? பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி யார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

முதல் பாகத்தில் அனைவரின் அறிமுகக் காட்சியையும் முழுப் படமாக விவரித்த இயக்குநர் மணிரத்னம். இரண்டாம் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்படி திரைக்கதை அமைத்து ரசிகர்களை சோழ தேசத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். காட்சிக்கு காட்சி கூஸ்பம்ப் கொடுக்கும்படியான மொமண்ட்ஸ்கள் நிறைய இருந்தாலும் அப்படியான கமர்சியல் விஷயங்களை எதையும் செய்யாமல் ஜஸ்ட் லைக் தட் கதையோடு டிராவல் செய்து, நாம் ஏதோ அந்த சோழ தேசத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு அங்கு நடக்கும் சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் செய்துள்ளார் இயக்குநர் மணிரத்தினம். ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவரவர்களுக்கான ஸ்பேஸை சரியான இடங்களில் கொடுத்து அவர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கி காட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் திரைக்கதைக்கும் உயிரூட்டி மனதுக்கு நெருக்கமான ஒரு காவியத்தை கொடுத்துள்ளார்.

ஆதித்த கரிகாலனின் வீரத்தையும் விரக்தியையும் கண்களிலேயே அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம். நந்தினியுடன் உணர்ச்சிகரமான நீண்ட உரையாடலை நிகழ்த்தும் அந்தக் காட்சி, விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று உணர வைக்கிறது.

யாரையும் மயக்கிவிடும் நந்தினியின் அழகையும் மனதின் ஆழத்தில் அவள் தேக்கி வைத்திருக்கும் வன்மத்தையும் அதைத் தாண்டி அவளுக்குள் இருக்கும் காதலையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ரகுமான், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் சிறப்பாக இருந்தது.