தீர்க்கதரிசி ; விமர்சனம்

காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணி புரியும் ஸ்ரீ மனுக்கு, அடையாரில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட போவதாக போன் வருகிறது. இது விளையாட்டாக யாரோ பேசுகிறார் என்று எண்ணி ஸ்ரீ மனும் மற்றவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் ஆனால் அடையாரில் இந்த பெண் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அந்த மர்ம நபர் அடுத்து நடக்கும் விபத்து, பேங்க் கொள்ளை என பல விஷயங்களை கட்டுபாட்டு அறைக்கு சொல்கிறார்.

பேங்க் கொள்ளை தவிர வேறு எதையும் காவல் துறையால் தடுக்க முடிய வில்லை. சிறப்பு அதிகாரி அஜ்மல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசும் மர்ம நபரை கண்டு பிடிக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீடியா இந்த விஷயத்தை பெரிது படுத்த மர்ம நபரை மக்கள் தீர்க்க தரிசி என்று புகழ்கிறார்கள். இறுதியில் ஸ்ரீமன் இந்த சம்பவங்களுக்கு பின் இருக்கும் சங்கிலி தொடரை கண்டு பிடிக்கிறார். இறுதியில் அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததா, நடக்கப்போகும் நிகழ்வுகள் அவருக்கு மட்டும் எப்படி முன்னதாகத் தெரிய வருகின்றன என்பது கதை.

காவல் அதிகாரியாக வரும் அஜ்மல், கதாபாத்திரத்துக்குரிய ஆளுமையை நடிப்பில் கொண்டு வந்துவிடுகிறார். சக காவல் அதிகாரிகளாக வரும் ஜெய்வந்த், துஷ்யந்த் இருவரும் கவனிக்கவைக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீமன், மதுமிதா, மூணாறு ரமேஷ் உரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மாறுபட்ட கவுரவக் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனக்கேயுரிய பகடியுடன் அலட்டாத நடிப்பை, கிளைமாக்ஸில் அதிர்ச்சியையும் கொடுத்து, கதைக்கும் களத்துக்கும் தோள் கொடுத்திருக்கிறார்.

வித்தியாசமான கோணத்தில் ஒரு பரபரப்பான படத்தை தந்துள்ளார் டைரக்டர். லக்ஷ்மன் ஒளிப்பதிவும் ரஞ்சீத் எடிட்டிங்கும் பரபரப்புக்கு துணை செய்கின்றன.

மொத்தத்தில் ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது.