ரிஷி, விக்கி, லோகி என மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இதில் ரிஷிக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்போது ரிஷியின் காதலி, ராட்சசன் பட இயக்குனரை சந்திக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன், நீ அந்த படத்திற்காக முயற்சி செய்.. நண்பர்களுடன் சேரவே கூடாது என்கிறார். இந்த நிலையில், நண்பர்கள் மூவரும் கிளம்பி மகாபலிபுரம் போகும்போது அர்ஜுன் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி கொண்டுபோவதை பார்த்துவிடுகின்றனர்.
இவர்கள் காரில் அவர்களை பின்தொடர்ந்து செல்கின்றனர். அப்போது விக்கி தான் கண்டுபிடித்திருக்கும் ஒரு கருவியை வைத்து அர்ஜுன் போன் பேசுவதை ஒட்டுக்கேட்கின்றனர். கடைசியில் எதிரிகளை எதிர்த்து அந்த பெண்ணை இவர்கள் மூவரும் சேர்ந்து காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
கடத்தல் கூட்டம், பெண் கடத்தல், ரவுடி என்று ஆக்ஷன் களத்துக்கான கதையாக இருந்தாலும் கதை நகர்வதென்னவோ டெரெரிஸ்ட் ட்ரேக்கர் கருவியை காரணம் காட்டி ஆக்ஷன் காட்சி எல்லாம் வெறும் போன் உரையாடலாக .முடிந்து விடுகிறது. இப்பவாவது புகுந்து அடிப்பார்களா என்று டென்ஷன் உச்சத்துக்கு செல்லும் போது ஒரு வழியாக பைட் சீனில் ஷாரிக், அரண் இறங்கி தாக்குதல் நடத்துவது ஆறுதல் அதிலும் மற்றொரு நண்பர் ஆஷிக் பேசியே காலத்தை கழிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் நாகேஷ் போல் பயந்து மிரண்டு சிரிப்பூட்டுகிறார்.
ஷாரிக் ஹசனின் காதலியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி ஆகியோரின் நடிப்பில் குறையில்லை. சிவம், கே.பி.ஒய்.சரத் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதை நகர்த்தலுக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
வில்லனாக அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் வேடமும், அவருடைய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. வில்லத்தனத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகர், பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தும் வகையில் பயணித்திருக்கிறது. பல இடங்களில் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அரன், கதை எழுதி இயக்கியிருக்கிறார். கல்லூரி காலக்கட்டத்தில் நண்பர்கள் செய்யும் அரட்டை, காதல், நகைச்சுவை ஆகியவற்றின் மூலம் முதல்பாதி படத்தை ஜாலியாக நகர்த்துபவர், இரண்டாம் பாதியில் வேறு ஒரு பாதையில் கதையை பயணிக்க வைத்து ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கிறார்
மொத்தத்தில் இந்த ஜிகிரி தோஸ்த் கைகொடுக்கும் தோஸ்த்தான்.