ஹனுமான் ; விமர்சனம்


பெரும்பாலும் ராமாயண கதைகள் படமாக்கப்ப்படும்போது அதில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே ஹனுமான் இடம்பெறுவார். தற்போது அவரியே மைய கதாபாத்திரமாக்கி முழு நீள திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ஹனுமான் எப்படி இருக்கிறது..? பார்க்கலாம்.

சின்னச் சின்ன திருட்டுகள் செய்துவரும் நாயகன் தேஜாசஜ்ஜா, தனது சகோதரி வரலட்சுமியுடன் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார். திடீரென ஒருநாள் அதீத சக்தி கிடைக்கிறது. அதை வைத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்வார் என்பது கடவுளின் திட்டம். அந்தச் சக்தியை அவரிடமிருந்து தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது வில்லன் வினய்யின் திட்டம். கடவுள் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்து அந்த சக்தியைக் கொடுதார்? அதன் விளைவுகள் என்னென்ன? வினிய்யின் எண்ணம் ஈடேறியதா என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.

நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, துறுதுறு நடிப்பால் ஹனுமந்த் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பாலய்யா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. காமெடி கலந்த நடிப்பில் சிறுவர்களையும் கவரும் தேஜா, காதல் காட்சி, செண்டிமெண்ட் காட்சி ஆகியவற்றிலும் அளவாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர், ஹீரோ செய்ய வேண்டிய விசயங்களை செய்து அதிரடி காட்டுகிறார். ஹீரோவுக்கு சக்தி வந்ததும் வழக்கம் பாடல் காட்சிகளிலும், சில சண்டைக்காட்சிகளிலும் தலைக்காட்ட தொடங்குகிறார்.

நாயகனின் சகோதரியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். சாதாரணமாக இருக்கும் இந்த வேடத்துக்கு இவர் எதற்கு? என்று நினைக்கும்போதே அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவரும் நன்றாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார். வில்லனாக நடித்திருக்கும் வினய், அலட்சியத் தோரணையைச் சரியாக வெளிப்படுத்தி ஏற்றுக்கொண்ட வேடத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

வெண்ணிலா கிஷோரின் காமெடி காட்சிகள் குறைவு என்றாலும் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. குருவி கூடு போன்ற தலை முடியுடன் வரும் நடிகரின் காட்சிகளும் சிரிக்க வைக்கிறது. சமுத்திரக்கனியின் வேடம் திரைக்கதையின் பலத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாகவும், கலர்புல்லாகவும் காட்டியிருக்கிறது. எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாவதாறு பல காட்சிகள் கையாளப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளில் இருக்கும் பில்டப்புகளை பல மடங்கு அதிகரித்து ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைத்தும் மிரட்டுகின்றன.

ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரசாந்த் வர்மா மற்றும் ஸ்கிரிப்ட்ஸ்வில்லே கதை எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ கதையில் பக்தியை சரியான அளவில் கலந்து சுவாரஸ்யமாக கொடுத்துள்ளதுடன் இப்படத்துக்குள் கேலி, கிண்டல், எள்ளல் ஆகிய எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா.