‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, ‘வெங்கி மாமா’, ‘நிசப்தம்’ என நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளோம். இப்போது தமிழிலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் மூலம் இங்கு வந்திருக்கிறோம். எங்கள் தயாரிப்பாளர் விஸ்வா தெலுங்கில் மட்டுமல்ல பல மொழிகளிலும் படங்கள் தயாரித்துள்ளார். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்”.

நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்!”

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், “இந்தப் படத்தில் முதலில் நான் சந்தித்தது இயக்குநர் கார்த்திக் யோகியைதான். படத்தின் கதையை அவர் சொன்னபோது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். நிச்சயம் நல்ல காமெடி எண்டர்டெயினர் படமாக இது இருக்கும். சந்தானத்தை பாடகாராக முதலில் பயன்படுத்திய இசையமைப்பாளர் நான் என்பது எனக்குப் பெருமை. அவருக்குப் பாட வரவில்லை என்றாலும் முயற்சி செய்து அதை சிறப்பாகவும் செய்துள்ளார். நான் சந்தானம் சார் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் இன்னும் சிறப்பாக எல்லோருக்கும் பிடித்தவிதமாக வந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் நல்ல மனிதர். பெரிய பட்ஜெட்டில் நல்ல படமாக சவால்களைக் கடந்து கொண்டு வந்துள்ளார். படம் வெற்றிப் பெறும்”.

நடிகை மேகா ஆகாஷ், “எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சாருக்கும் கிரியேட்டிவ் புரொடியூசர் நட்டி சாருக்கும் நன்றி. படப்பிடிப்பின்போது என் பாட்டி இறந்ததால் எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. அதை எல்லாம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். நிறைய நடிகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் எனக்கு ‘கயல்’ என்ற வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நன்றி. சந்தானம் சாருடைய நடிப்புக் குறித்து நான் தனியாக சொல்லத் தேவையில்லை. சிறந்த நடிகர் அவர். பிப்ரவரி 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

இயக்குநர், நடிகர் தமிழ், “இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்புத் தரப்புக்கும் இயக்குநர் கார்த்திக்கும் நன்றி. 65 நாட்கள் என சிங்கிள் ஷெட்யூலில் இந்தக் கதையை நம்பி கார்த்திக் எடுத்து முடித்துள்ளார். படத்திற்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். நிச்சயம் நல்ல படமாக வெற்றி அடையும். பிற்போக்குத்தனங்களைப் பேசும் படம் இது”.

நடிகர் ரவி மரியா, “இத்தனைப் படங்கள் வெற்றிப் பெற்றப் பின்பும் ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர் நடிகர் சந்தானம். சந்தானம் சாருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் இருக்கும். அந்த அளவுக்கு காமெடி எண்டர்டெயினராக வந்திருக்கிறது. நான் நடிகரானதுக்குப் பிறகு சந்தானம் சாருடன் நல்ல கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்படி பல வருடங்கள் கழித்து கார்த்திக் எனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்துள்ளார். படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவும் சிறந்த பணி செய்துள்ளனர்”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “’வடக்குப்பட்டி ராமசாமி’ அழகானத் தமிழ்ப் பெயர். ‘பார்க்கிங்’ படம் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. அதற்கு இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி. எனக்கு நல்ல கதாபாத்திரம். காண முடிகின்ற உருவங்களில் நம்மால் கடவுளைக் காண முடியும். காண முடியாத சில விஷயங்களில் நம்மால் கடவுளை உணர முடியும். இந்த விஷயத்தை அற்புதமாக கார்த்திக் யோகி இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி அடையும்”.

நடிகர் சேஷூ, “சந்தானம் படம் என்றாலே ஜாலிதான். நீங்களும் படம் பார்த்துவிட்டு ஜாலியாக, நிம்மதியாக, சந்தோஷமாக உணர்வீர்கள். வெற்றிப்படம் இது!”

நடிகர் கூல் சுரேஷ், “’வடக்குப்பட்டி ராமசாமி’ எனக்கு குலசாமி. சந்தானம் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகராக எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என இயக்குநர் கார்த்திக் சொன்னார். அந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.

நடிகர் பிரஷாந்த், “படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்ப ஃபன்னாக இருக்கும். இயக்குநர் கார்த்திக், சந்தானம் என அனைவருக்கும் நன்றி. படக்குழு அனைவருமே கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். விஜயகாந்த் சார் போல நாளை சந்தானம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சரியாக எல்லோரிடமும் நடந்து கொள்வார்”.

நடிகை ஜாக்குலின், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த கடவுளுக்கும் இயக்குநர் கார்த்திக், தயாரிப்பாளர் விஸ்வா, நட்டி இவர்களுக்கு நன்றி. நான் சினிமாக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சினிமாவில் கடின உழைப்பு, அதிர்ஷ்டம் என எல்லாமே ஒன்று கூடி வந்தால்தான் மேஜிக் நடக்கும். அது எனக்கு இந்தப் படம் மூலம் நடக்கும் என நம்பிக்கை உள்ளது”.

நடிகர் அல்லு சிரீஷ், “நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்து வரும் காலத்தில் இருந்து அவரைக் கவனித்து வருகிறேன். அவருடைய படங்களில் நகைச்சுவை வெகுவாக ரசித்து இருக்கிறேன். படம் மட்டுமல்ல, அவருடைய பேட்டிகளும் எனக்குப் பிடிக்கும். விரைவில் உங்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஏவிஎம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என அப்போதுள்ள தயாரிப்பாளர்கள் தெலுங்கு நடிகர்களை வைத்துப் படம் எடுத்தார்கள். அந்த டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இல்லை. இப்போது அது மீண்டும் இந்தப் படம் மூலம் ஆரம்பித்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்த விஸ்வா சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

நடிகர் அஸ்வின், “சந்தானம் சார் எங்க எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன். சந்தானம் சாரை வைத்து பெரிய பட்ஜெட் படம் என்ற நம்பிக்கை வைத்த நட்டி சார், விஸ்வா சாருக்கு நன்றி. இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அல்லு சிரீஷ், ஆர்யா ப்ரோ எல்லோருக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திக்கிற்கு வாழ்த்துகள்”.

டான்ஸ் மாஸ்டர் ஷெரிஃப், “ஒரு ஹீரோவாக நடிப்பு, நடனம் எனப் பலவற்றிலும் சந்தானம் சார் கடின உழைப்புக் கொடுத்து சிறப்பாக வந்துள்ளார். பெரிய இன்ஸ்பிரேஷன் இது. இயக்குநர் கார்த்திக் இவ்வளவு பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவை சிறப்பாகக் கையாண்டுள்ளார். நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் இந்தப் படம். 70’ஸ் படம் என்பதால் சிறப்பாக வந்துள்ளது. படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்”.

இயக்குநர் மடோன் அஸ்வின், “’நாளைய இயக்குநர்’ செய்யும்போதில் இருந்தே நானும் கார்த்திக் யோகியும் நண்பர்கள். முதலில் நடிகராக இருந்து பிறகு இயக்குநரானார். படம் இயக்குவதில் திறமையானவர். நிறைய கற்றுக் கொண்டார். இந்த மேடை அவருக்குக் கிடைக்க பத்துவருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. கடின உழைப்புக் கொடுத்து இந்த இடத்திற்கு வந்துள்ள அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றிக் காத்திருக்கிறது. அவருக்கு சிறந்த காமெடி சென்ஸ் உள்ளது. ‘டிக்கிலோனா’வில் அது வொர்க்கவுட் ஆனது. இந்தப் படமும் அப்படி உங்களுக்கு சிறப்பானதாக அமையும்”.

இயக்குநர் ஸ்ரீகணேஷ், “இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியும். படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும். ’லொள்ளு சபா’ சமயத்தில் இருந்தே சந்தானம் சாரின் பெரிய ரசிகன் நான். அவர் படம் நடிக்க வந்ததும் நிறையப் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். கார்த்தி முதலில் சந்தானம் சாருக்கு கதை சொல்லப் போகிறேன் என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் படம் முக்கியப் படமாக அமைந்து பெரிய வெற்றிப் பெற வாழ்த்துகள்!”

இயக்குநர் ராம், “கார்த்திக் அண்ணா ரொம்ப ஜாலியான நபர். ‘டிக்கிலோனா’ படம் போல ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படமும் இன்னும் ஜாலியாக இருக்கும். சந்தானம் சாரும் இந்த காம்பினேஷனில் இருக்கும் போது நிச்சயம் தியேட்டர் கலகலப்பாக இருக்கும்”.

நடிகர் ஆர்யா, “’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்.

நடிகர் சந்தானம், “எப்பவுமே ஆர்யா என்னை பார்த்தால் என் உடம்பை தான் முதலில் பார்ப்பான். என் இங்கே சதை போட்டு இருக்குன்னு திட்டுவான். ஒருமுறை புத்தாண்டு பார்ட்டிக்கு செல்லலாம் என யோசித்து ஆர்யாவுக்கு தெரியாமல் கால் செய்துவிட்டேன். புது வருஷம் அதுவுமாக என்னை ஜிம் போக வைத்துவிட்டான். எந்தவொரு ஃபைனான்ஸியரை பார்க்கப் போனாலும் ஆர்யா எப்படி இருக்கிறார் என என்னிடம் கேட்பார்கள். ஆர்யா போனால் சந்தானம் எப்படி இருக்கிறார் என கேட்பார்கள். நலம் விசாரிக்க அல்ல! நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு கடன் வாங்கியிருக்கோம். ஏதாவது படம் நடிக்கிறோமோ, படம் ஓடுதா, பணம் வருமான்னு தான் விசாரிப்பாங்க. தங்க முட்டை போடுற வாத்து ஒன்னு கிடைச்சிருக்குன்னு ஆர்யா ஒருமுறை சொல்லி விட்டு ஒருத்தரிடம் அழைத்துச் சென்றான். வாத்து முட்டை போடுதான்னு பின்னாடியே கை வச்சு பார்த்தா எங்களுக்குத் தான் பின்னாடி ரத்தம் வருது. அந்த வாத்து யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றார்.

இயக்குநர் கார்த்திக் யோகி, “’டிக்கிலோனா’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆரம்பிக்கக் காரணம். இதன் பட்ஜெட் ரொம்பவே பெருசு. தயாரிப்பாளர் விஸ்வா கதைக் கேட்டதும் பிடித்துப் போய் சம்மதித்தார். எனக்கு சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்த என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ’டிக்கிலோனா’ படத்திற்கு சந்தானம் அண்ணன் கொடுத்த ஆதரவு பெரிது. மீண்டும் மீண்டும் சந்தானம் அண்ணாவுடன் படம் செய்வேன். அந்த அளவுக்கு அவர் என் மேல் அன்பு வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.