ரசவாதி ; விமர்சனம்


சித்த மருத்துவரான அர்ஜுன் தான் தான் வாழக்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்குச் செல்காறார். அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன். இருவருக்கும் கொஞ்ச நாட்களிலேயே காதல் வளர்கிறது.

அதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் சுஜித் சங்கர். அங்கே அர்ஜுன் தாஸை கண்டதும் கோபடமடைவதோடு, அவரது அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். தன் மீது சுஜித் எதற்காக வன்மத்தை கக்குகிறார்.

அப்படி அர்ஜுன் தாஸ் மீது சுஜித் சங்கர் வன்மம் கொள்ள காரணம் என்ன?, அர்ஜுன் மறக்க நினைக்கும் அவரது கடந்தகால வாழ்க்கை என்ன? அர்ஜுன்-சுஜித் மோதல் எந்தவிதமாக முடிவுக்கு வநதது என்பது மீதிக்கதை.

பொதுவாகவே நடிகர் அர்ஜுன் தாஸ், வில்லனாக நடித்தாலும் சரி, நாயகனாக நடித்தாலும் சரி, இறுக்கமான மனநிலையோடு இருக்கும் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்திலும் அப்படிப்பட்ட வேடம் தான் என்றாலும் இம்முறை ஒரு குறும்பு தனத்துடன் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கி தாங்கி நடந்து கொண்டு, இயற்கை காவலாரக புதிய தோற்றம் காட்டியுள்ளார்.

இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்குமளவுக்கான கதாபாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்தி எப்போதும் முகத்தில் மென்சோகத்தை வெளிப்படுத்தினாலும் நடிப்போடு சேர்ந்த அழகு தேவதையாக படம் முழுக்க மனதில் நிற்கும் அளவிற்கு நடிப்பிலும் மிளிர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேஷ்மா, பரதநாட்டிய நடனத்தில் தொடங்கி, தனது இல்லற வாழ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சி என தன் பார்வையாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுஜித் சங்கர், வில்லன் வேடமாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் ஹீரோ பக்கத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிடுகிறார். அவரது மேனரிசமும், வசன உச்சரிப்பும் வித்தியாசமாக இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தை தனித்துவமாக காட்டி கவனம் ஈர்த்துவிடுகிறது

உளவியல் மருத்துவர் சைலஜாவாக வரும் ரம்யா சுப்ரமணியன் கதாபாத்திரம் வித்தியாசமாக சித்தரிக்கப்பட்டு கலகலப்பிற்கு வழிவகுத்திருக்கிறது. ஜி.எம்.சுந்தர், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

தமனின் பின்னணி இசை சாந்தகுமாரின் திரைமொழியோடு அழகாக பயணிக்கிறது. சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் குளுமையை ஒவ்வொரு ப்ரேமிலும் உணர முடிகின்றது.

வெறும் காதல் கதையாக இல்லாமல், இயற்கை மீதான கவனத்தை ஈர்க்கும்படியான படமாக அளித்து சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். நாயகன் மட்டும் இன்றி வில்லன் கதாபாத்திரன் மூலம் கூட சில வாழ்க்கை தத்துவங்களை சொல்லும் வசனங்கள் அனைத்தும் கைதட்டல் பெறுகிறது. அதேசமயம் முதல் பாதியிலும் கதைக்கான மையக்கரு எட்டிப் பார்த்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.