தமிழில் அரசியல் படங்கள் அவ்வப்போது வந்தாலும், அரசியல் நையாண்டி செய்யும் படங்கள் வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த குறையை போகும் விதமாகவே வெளியாகியிருக்கும் படம் தான் உயிர் தமிழுக்கு. இந்தப்படம் அமைதியாக கடந்து போகிறதா அல்லது இன்னொரு அமைதிப்படையாக ஆச்சர்யப்படுத்துகிறதா ? பார்க்கலாம்.
கேபிள் டி.வி ஆப்ரேட்டரான அமீர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஆளுங்கட்சியை சேர்ந்த மாமா இமான் அண்ணாச்சிக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற இடத்தில் அங்கே எதிர்கட்சி முன்னாள் அமைச்சரான ஆனந்தராஜின் மகள் சாந்தினி ஸ்ரீதரனை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். அதனால் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக தானே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெற்று சாந்தினியை காதலித்தாலும், அமீர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் ஆனந்தராஜ் அதை பலமாக எதிர்க்கிறார்.
இந்நிலையில் திடீரென ஆனந்தராஜ் கொல்லப்பட, கொலைப்பழி அமீர் மீது விழுகிறது. சாந்தினியும் கூட அமீர் தான் தன் தந்தையை கொன்றார் என்று அழுத்தமாக நம்பி பாண்டியனை வெறுக்கிறார். இந்த நிலையில் மீண்டும் எம்எல் ஏ இடைத்தேர்தலில் இருவரும் எதிரெதிராக மோதும் சூழல் உருவாகிறது.
இறுதியில் தான் நிரபராதி என்று அமீர் நிரூபிதாரா? அவரது காதலை சாந்தினி ஏற்றுக் கொண்டாரா? ஆனந்தராஜை கொன்றது யார் என்கிற கேள்விகளுக்கு விடை சொகிறது மீதிப்படம்.
புரட்சிகரமான வேடங்களில் நடித்திருக்கும் அமீர், முதல் முறையாக அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் அசால்டாக செய்து கமர்ஷியல் ஹீரோவாக முத்திரை பதித்திருக்கிறார்.குறிப்பாக அமீருக்குள் இப்படி ஒரு கலகலப்பான நடிகர் இருக்கிறாரா என்று அனைவரும் ஆச்சரியம்படும் விதமாக தெனாவெட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி தமிழ்ச் செல்வியாக வரும் சாந்தினி ஸ்ரீதரனுக்கும் ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் தனது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளிலும் சரி, தனது தந்தையை கொன்றது காதலன் பாண்டியன் என்று நினைத்து பொங்கும் காட்சியிலும் சரி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
பழக்கடை ராமச்சந்திரனாக ஆனந்தராஜ் வழக்கம் போல் நகைச்சுவை கலந்த நடிப்பை வழங்கி நம்மை கவர்கிறார். மேலும் இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவருமே இந்த அரசியல் படத்திற்கு தாங்கள் பொருத்தமான தேர்வு என நிரூபித்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பாக இசையமைத்துள்ளார் வித்யாசாகர். குறிப்பாக அந்த தேர்தல் பாடல் சரியான நெத்தியடி. தேவராஜின் ஒளிப்பதிவில் திரைக்கதையோட்டத்தின் பரிமாணங்கள் காட்சிகளாக விரிந்திருக்கின்றன.
தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் காதல் கதையை ஜாலியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆதம்பாவா, சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது, இவிஎம் மிஷினால் தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைப்பது என சம கால அரசியலை கிண்டலடித்துள்ளார். குறிப்பாக இந்தக்கதையில் அமீரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விதமாகவே காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
அந்த வகையில் நீண்ட நாளைக்கு பிறகு இன்னொரு அமைதிப்படை போல இந்தப்படத்தை கொடுத்து ஓரளவுக்கு ரசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதம் பாவா.