ஜோக்கர், அருவி, பர்ஹானா, கடந்த வருடம் வெளியான இறுகப்பற்று என தொடர்ந்து வித்தியாசமான, அதேசமயம் சமூக விழிப்புணர்வுக்கான படங்களை கொடுத்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் வெளியாகி உள்ள படம் ‘அஞ்சாமை. நீட் தேர்வை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்தப்படம் அதன் நன்மையை பேசுகிறதா இல்லை பாதிப்பை பறைசாற்றுகிறதா ? பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வாழும் கூத்து பட்டரை கலைஞர் மற்றும் பூ விவசாயியான விதார்த் – வாணி போஜன் ஆகியோரின் மகன் கிருத்திக் மோகன். மருத்தவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மகனை அரசு பள்ளியிலேயே சேர்த்து ஊக்கப்படுத்துகிறார் விதார்த். அந்த வருடம் தான் நீட் தேர்வு அறிமுகமாக, மகனை தனியார் தகுதி தேர்வு பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்க வைக்கிறார்
ஆனால் தமிழ்நாட்டில் தேர்வு மையம் ஒதுக்காமல் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்பட பல சிரமங்களுக்கு இடையே மன உளைச்சல்களுடன் மகனை தேர்வு மையத்திற்குள் கடைசி நேரத்தில் அனுப்பி வைக்கிறார். அப்போது விதார்த் அங்கே எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவ, தனது தந்தையின் மரணத்திற்கு இந்த நீட் தரவு கெடுபிடிகள் தான் காரணம் என நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறுகிறான் மகன் கிருத்திக் மோகன். அவனுக்கு அந்த குடும்பத்துக்கு நீதி கிடைத்ததா என்பது மீதிக்கதை.
தன் மகனின் மருத்துவர் கனவை நனவாக்கப் போராடும் தந்தையாக நடித்திருக்கிறார் நாயகன் விதார்த்.இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்தை என்ன நினைத்து எழுதினாரோ? அதை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ள அந்த வேடத்துக்கு உயிர் கொடுத்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். இதுவரை படங்களில் காட்சிப் புதுமையாகவே வந்து கொண்டிருந்த வாணி போஜனுக்கு இந்தப் படத்தில் நடிப்புத் திறமையைக் காட்ட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது
போலீஸ் அதிகாரி மற்றும் வக்கீல் இரண்டு வித பரிணாமங்களில் ரகுமான். நீதிமன்ற வழக்காடலில் ரகுமான் தனது அழுத்தமான நடிப்பினால் நீட்’ என்னும் தகுதி தேர்வை கிழித்தெடுக்கும் காட்சிகள் பரபரப்பானவை.
இவர்களுடன் பாலசந்திரன் ஐஏஎஸ் நடிப்பும் மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு மனதில் பதிகிறார்கள்
ஒளிப்பதிவாளர் கார்த்திக், நட்சத்திரங்களை கதாபாத்திரங்களாக பயணிக்க வைத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து கவனம் ஈர்க்கிறது.
சிலம்பம் கத்துக்கிட்டு வந்தவன்கிட்ட, கத்தி சண்டை போடச் சொன்னா எப்படி சார்? . “கிரிக்கெட் போட்டி பார்க்க மட்டும் தனி ட்ரெய்ன் விடறீங்க.. நீட் தேர்வுக்கு விட முடியாதா”? என பல இடங்களில் வசனங்கள் கத்தியின் கூர்மை. நீட் தேர்வின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகி இருப்பதை, புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன், வசனங்கள் மூலம் நீட் தேர்வை அமல்படுத்திய அரசாங்கத்தை சம்மட்டியால் அடிக்கவும் செய்திருக்கிறார்