கோழிப்பண்ணை செல்லத்துரை ; விமர்சனம்


தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்காக பிரிய முடிவெடுத்த அப்பா அம்மா இருவரும் நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு தங்கள் வழியே செல்கின்றனர். ஒரே ஆதரவான பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபு இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.அப்பா அம்மா இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்கிறார் அண்ணன் இவர்கள் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள். தங்கையும் காதலில் விழுகிறார். இதனால் எழும் சிக்கல்கள், அதை ஏகன் சமாளித்தாரா என்பது மீதிக்கதை

செல்லதுரையாக ஏகன் விரைப்பான முகபாவத்துடன் முரட்டு இளைஞராகவும், தன் தங்கை மீது அளவு கடந்த பாசத்துடன் இருப்பது, பெற்றோர்களை கண்டவுடன் கோபம் ஏற்பட்டாலும் அவர்களின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு உதவுவது என்று அனைத்து காட்சிகளிலும் இயல்பாக நடித்துள்ளார்

கோழிப்பண்ணை ஓனராக வரும் யோகி பாபு குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். தனது காமெடி வசனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கண்ணியமான வசனங்கள் பேசி கவர்கிறார்.

ஏகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்திய தேவி அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு காதலை கைவிட துணிவது வலு. அவரது நடிப்பும் எதார்த்தம் மீறாமல் இருக்கிறது.

செல்லதுரையை துரத்தி துரத்தி காதலிக்கும் பிரிகிடா, கள்ளக்காதலால் வாழ்க்கையை தொலைக்கும் தாயாக ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி ஆகியோர் யதார்த்தமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு கதை நடக்கும் கிராமத்தில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவு.

தனது ஒவ்வொரு படங்களிலும் மனித உணர்வுகள் பற்றி பேசி வரும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த படத்தில் மனித உணர்வுகளுடன், ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை வைத்துக்கொண்டு ஒரு தெய்வீக பயண உணர்வை பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார்.