மெய்யழகன் ; விமர்சனம்


சொத்துப் பிரச்சினைகளில் பூர்வீக வீட்டை இழந்து தஞ்சாவூரில் இருந்து சிறுவயதிலேயே சென்னைக்கு குடிப்பெயர்கிறார் அரவிந்த்சாமி. பல வருடங்களுக்கு பின் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் அரவிந்த்சாமிக்கு வந்தது. விசேஷத்தை முடித்துவிட்டு அடுத்த பஸ்ஸில் ஊர் செல்ல வேண்டிய நினைவுடன் செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பெயர் தெரியாத தன் மீது அத்தான் என்று பாசத்தை பொழிகிற அந்த இளைஞர் கார்த்தியின் அன்பு மொத்தமாக கரைந்து போகிறார். யார் இந்த கார்த்தி தனக்கும் அவருக்குமான உறவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இரு தூண்களாக படத்தைத் தாங்கி நிற்கின்றனர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் கதைக்கு நன்றாகவே துணை நிற்கிறது. கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் கார்த்தி, நடிப்பு, பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம் என அனைத்து உனர்வுகளையும் மிக அழகாக வெளிக்காட்டி மெய்யழகன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி, அதற்கான தோற்றத்தில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் கார்த்தி இந்தப்படத்திலும் அதை செவ்வனே செய்திருக்கிறார்.

கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் அருள்மொழி என்ற வேடத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். தான் நேசித்த ஊரை விட்டு பிரிந்து செல்லும் போதும், சொந்தங்களிடமிருந்து விலகி இருப்பதும், பின்னர் திரும்பி வரும் போது அசை போடும் ஞாபகங்கள், தங்கையிடம் திருமண பரிசை கொடுத்து அதை அணிய வைக்கும் அழகான நெகிழ வைக்கும் தருணங்கள் என அனைத்திலும் அதிக வசனங்கள் பேசாமல் தன் பங்கிற்கு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்.

பாசக்கார மாமாவாக ராஜ்கிரண், மெய்யழகனின் மனைவி நந்தினியாக கணவனின் சொல்லுக்கு மறு பேச்சு பேசாத ஸ்ரீ திவ்யா, திருமண மேடையில் பரிசை திறக்கச் செய்து அதை அணிந்து மகிழ்ந்து அண்ணனிடம் உருகும் தங்கை புவனாவாக ஸ்வதி காண்டே, அருள்மொழியின் மனைவியாக தேவதர்சினி என அனைவருமே தங்களது பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா கதைக்களத்தின் அழகை மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி மென்மையாக பயணித்திருக்கிறது.

உள்ளூரில் குடிகாரனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட அத்தை மகள் நான் உன்னையே கட்டி இருக்கலாம் என்ற ஏக்கத்துடன் அரவிந்த்சாமியிடம் கூறுவது தங்கையான கல்யாணப் பெண் அண்ணன் கொடுத்த கிஃப்ட்-டை மேடையிலேயே பிரித்து அணிந்து கொள்ளும் பாசம். பல வருடங்கள் கழித்து வருகின்ற அத்தானை ஏமாற்றி ஒருநாள் இரவு தங்க வைத்து விடுகிற மாப்பிள்ளையின் மகிழ்ச்சி என எமோஷனலாக கலகலப்பாகவும் படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் பிரேம்குமார்.. என்ன, படத்தின் நீளம் தான் கொஞ்சம் அதிகம். அதை குறைத்திருக்கலாம்.