தில் ராஜா ; விமர்சனம்


கார் மெக்கானிக் விஜய் சத்யா தனது மனைவி ஷெரின் மற்றும் குழந்தையுடன் மகளின் பிறந்தநாளுக்;காக ஷாப்பிங் செல்கின்றனர். இரவில் காரில் வரும்போது வழியில் அமைச்சர் ஏ வெங்கடேஷின் மகன் மற்றும் அவனது மூன்று நண்பர்களும் போதையில் ஷெரினை அடைய நினைத்து அவர்களை துரத்தி வழிமறித்து போதையில் ரகளை செய்கின்றனர். இதில் நடக்கும் சண்டையில் அமைச்சரின் மகனை விஜய் சத்யா தாக்கும் போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு இறந்துவிடுகிறான்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியாகும் விஜய் சத்யா தன் மனைவி மகளுடன் தப்பித்து வந்து விடுகிறார். அமைச்சர் ஏ.வெங்கடேஷ் தன் மகன் கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்க துடிக்கிறார். போலீஸ் சம்யுக்தா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட, தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது.

இறுதியில் விஜய் சத்யா அமைச்சர் மற்றும் போலீசிடமிருந்து தப்பித்தாரா? மனைவி மகள் இருவரையும் காப்பாற்ற முடிந்ததா? விஜய் சத்யா கொலை பழியிலிருந்து விடுபட என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்துகிறார்.

விஜய் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின், பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக அல்லாமல் திரைக்கதையோடு பயணிக்கும் நாயகியாக வலம் வருகிறார்.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தாவின் காக்கி சட்டை சீருடையை மறந்து அவரை ரசிக்கும் அளவுக்கு கவர்ச்சியாக வலம் வருகிறார்.

வில்லனாக இயக்குநர் வெங்கடேஷ், அதிரடியான அரசியல்வாதியை கண் முன் நிறுத்துகிறார். அவரது மனைவியாக வரும் வனிதாவும் வில்லியாக அசரவைக்கிறார். இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் கேமரா சேசிங் காட்சிகளை வேகமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களமாகவும் படமாக்கியிருக்கிறது. இந்த கமர்சியல் படத்துக்கு அமரீஷின் இசை பெரிய அளவில் உதவுகிறது.

கமர்ஷியல் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் ஏ.வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன் ஆக்ஷன் பாணியில் இப்படத்தினையும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான படமாக கொடுத்துள்ளார். இருந்தாலும் பட ஆரம்பத்தில் இருந்து புதிய விஷயங்கள் எதுவும் இல்லாமல் நகரும் திரைக்கதை கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க சூடு பிடித்துக் கொள்கிறது. ஒரு சாமானியன் ஒரு அரசியல்வாதியிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் முன்னச்சிரிக்கை மற்றும் சாமர்த்திய வியூகத்துடன் கதைக்களத்தை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.