நாயகி கவிப்பிரியா குடும்ப சூழல் காரணமாக ஒரு மலை பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் பெண்மணியான ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு அதிக சம்பளம் கிடைப்பதால் கிளம்பிச் செல்ல நினைக்கிறார். ஆனால் அவரது காதலன் தங்கதுரை அவரைப் போக விடாமல் தடுக்கிறார். இருப்பினும் அதை மீறி அங்கு செல்லும் கவிப்பிரியாவுக்கு அங்கே நடக்கும் நிகழ்வுகளும் ஸ்ரீ ரஞ்சனியின் மர்ம நடவடிக்கைகளும் அச்சத்தை தருகின்றன.
தன் காதலனுடன் அவ்வப்போது செல்போனில் மட்டும் பேசி ஆறுதல் அடைந்து வந்த கவிப்பிரியாவுக்கு செல்போனும் பழுதடைந்து விட அவரது உருவத்திலும் மாற்றங்கள் வருகின்றன. அங்கே கண்ணாடி என எதுவும் இல்லாததால் அவருக்கு அது தெரியவில்லை. எதனால் இவை நடக்கின்றன இன்று நாம் குழம்பும் வேளையில் திடீரென அங்கே கவிப்பிரியாவை தேடி மைக்கேல் தங்கதுரை வந்து நிற்கிறார். அங்கே தான் எதிர்பாராத டுவிஸ்ட் அது என்ன என்பதை மீதி கதை சொல்கிறது.
மைக்கேல் தங்கதுரை இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் போலத்தான் இதுவும் என்றாலும் இது சற்று நெகடிவ் சாயில் கலந்து இருப்பதால் நடிப்பில் சற்றே வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல நாயகியின் தோளில் முழு பாரத்தையும் சுமத்தியதாலோ என்னவோ நடிகை கவிப்பிரியா அந்த மகிழ்நிலா என்கிற கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்து இருக்கிறார்.
இதுவரை பாந்தமான அம்மாவாக, அக்காவாக பார்த்து வந்த நடிகை ஸ்ரீரஞ்சனி இதில் ரசிகர்களை மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.
காட்டுப் பகுதி, அதற்குள் இருக்கும் வீடு, திகிலான கதைக்களம் என ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்திக்கு தீனி போடும் விஷயங்கள் நிறைய இருப்பதால் ஒளிப்பதிவில் விளையாடி இருப்பதுடன் நம்மையும் மிரட்டி இருக்கிறார். கூடவே இசையமைப்பாளர்கள் விவேக் ஜஸ்வந்த் இருவரும் பின்னணி இசை மூலம் நம்மை பதற வைக்கிறார்கள்.
இப்படி ஒரு கதையின் பின்னணியில் புராண கால சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை மையப்படுத்தி அதை நோக்கி கதையையும் திரைக்கதையும் ஓரளவுக்கு போர் அடிக்காமல் நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் அருண் கே.ஆர். அதேசமயம் படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. ஆனாலும் இந்த கதைக்கு ஏற்ற ஒரு விறுவிறுப்பை பார்வையாளர்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.