வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா ? பார்க்கலாம்.
சென்னைக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தங்களின் கடற்கரை வீட்டில் விடுமுறையைக் கழிக்க வருகிறது வசந்த் (ஜீவா), ஆரண்யா (பிரியா பவானி சங்கர்) ஜோடி. யாருமில்லாத அந்தத் தொடர் வீடுகளைப் பிரிக்கும் பூமத்திய ரேகையாக வரும் ‘இருள் சூழ்ந்த’ இடத்தால் பல்வேறு மர்மமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஒரு கட்டத்தில் இவர்களின் உருவத்திலேயே சிலர் அங்கே உலாவத் தொடங்க, இந்த ஆபத்துகளிலிருந்து அந்த ஜோடி தப்பித்ததா, இல்லையா என்பதே படத்தின் கதை.
இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி நடக்கும் கதையாக இருந்தாலும், அதை பலமான திரைக்கதை மூலம் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். ஜீவா – பிரியா பவானி சங்கர் தம்பதி போலவே மற்றொரு ஜோடி எப்படி? , இரண்டு ஜோடிகளில் யார் நிஜம்? என்ற கேள்விகள் தான் படத்தின் சஸ்பென்ஸ் என்றாலும் அந்த ஒரு சஸ்பென்ஸை வைத்துக் கொண்டு, அவர்கள் வெவ்வேறு நேரங்களில் பயணிப்பது போன்ற காட்சிகள் மூலம் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை பதற்றத்தின் உட்சத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.
படத்திற்கு பிளஸ் என்றால் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் தான் படத்தில் நிறைய நேரம் பயணிக்கிறார்கள். அவர்களின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. குறிப்பாக ஜீவா இதுவரை படங்களில் ஏற்காத பாத்திரத்தை இதில் ஏற்றிருக்கிறார். ஜீவாவின் நடிப்பிற்கு ஈடுகொடுக்கும் விதமாக தனது கேரக்டரையும் பெர்பெக்டாக செய்து முடித்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். கண்களால் பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
இவர்களுடன் விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷா ரா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை நியாயமாக நிறைவு செய்து இருக்கிறார்கள்.
ஒரே குடியிருப்பு பகுதிதான் களம். ஆனாலும் நம்மை சோர்வடையச் செய்யாமல், பல்வேறு கோணங்களில் படம் பிடித்து திகிலை தருகிறது கோகுல் பினோயின் ஒளிப்பதிவு. குறிப்பாக இரவுநேரக் காட்சிகள் அசரடிக்கின்றன
பயமுறுத்த தேவையில்லாத சத்தங்களை சேர்க்காமல் புது முயற்சியில் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
நம் வாழ்க்கையில் தற்போது நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு அறிவியல் தான் காரணம். அத்தகைய அறிவியல் மூலம் கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கும் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி, அதை வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி பார்வையாளர்களை யோசிக்க வைப்பதோடு, அது குறித்து பேச வைக்கும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கிறார் .
பிளாக் ; தமிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி