பல வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அந்த நாள். பாடல்களே இல்லாமல் உருவான அந்தபடத்தின் டைட்டிலுடன் தற்போது வெளியாகியுள்ள படம் தான் அந்த நாள்..
கதையின் நாயகனான ஸ்ரீ (ஆர்யன் ஷாம்) திரைப்படத் துறையில் இயக்குநராக பணியாற்றுகிறார். இவர் தன்னுடைய புதிய திரைப்படத்தின் திரைக்கதை விவாதத்திற்காக தயாரிப்பாளர் ஒருங்கிணைப்பு செய்திருந்த சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் ‘பஞ்சமி பங்களா’ எனும் இடத்திற்கு தன் இளம் குழு உடன் செல்கிறார்.
அங்கு அவர்களுக்கு அமானுஷ்யமான அனுபவங்கள் ஏற்படுகிறது. மேலும் அவர்களை முகமூடி அணிந்த மனிதன் ஒருவனும் தாக்க தயாராகிறான். அந்த பங்களாவில் இருந்து வெளியேற அவர்கள் முயற்சிக்க அதில் தோல்வி கிடைக்கிறது. இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் இதன் திகிலூட்டும் பின்னணி என்ன? என்பதும் தான் இப்படத்தின் கதை.
ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பலம் வாய்ந்த வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் நாயகன் ஆர்யன் ஷாம், முதல் படத்திலேயே எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்து கவனம் ஈர்க்கிறார். ஆறடி உயரம், அமைதியான முகம் என்று ஒரு பக்கம் காதல் கதைகளுக்கு பொருத்தமானவராக இருப்பவர், மற்றொரு பக்கம் கோபமான முகத்தோடு ஆக்ஷன் ஹீரோவாகவும் அசத்துகிறார். நல்ல கதைகளை தேர்வு செய்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக நடித்திருக்கும் லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு சரியான முறையில் பயன்பட்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
பார்வையாளர்கள் அச்சப்படும் வகையில் திகில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல், இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
ஒரே நாள் இரவு நடக்கும் கதையில் தனிமையான பங்களாவை சுற்றியே காட்சிகளையமைத்து சூன்யம், நரபலி என்று அதிர்ச்சியூட்டும் காட்சிகளை கொடுத்திருப்பதில் பெரிய உழைப்புடன் பங்காற்றியிருக்கிறார் இயக்குநர் விவி கதிரேசன். உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் சுவாரசியமான திருப்பங்கள் ரசிகர்களை ஓரளவு அச்சுறுத்தவே செய்கிறது. படத்தின் டிவிஸ்ட் யாரும் எதிர்பாராதது நிச்சயம் ஷீட்டின் நுனிக்கி அழைத்து வரும் காட்சிகள் படத்தில் நிறைய இருக்கிறது.