மேக்ஸ் : விமர்சனம்


போலீஸ் அதிகாரி அர்ஜுன் இரண்டு மாத சஸ்பென்ஷனுக்கு பிறகு புதிய ஸ்டேஷனில் பணியில் சேர்கிறார். இரவில், இருவர் குடித்துவிட்டு போலீசிடம் தகராறு செய்ய, அவர்களை அடித்து இழுத்துவந்து சிறையில் தள்ளுகிறார். அன்றைய இரவில் அந்த ஸ்டேஷனில் நடக்கும் ஒரு அதிரடி சம்பவம், மொத்த காலவர்களையும் பிரச்சினையில் சிக்கவைக்கிறது.

அந்த சம்பவம் வெளியே தெரிந்தால் மொத்த பேரின் உயிருக்கும், இரு அமைச்சர்களால் ஆபத்து என்கிற நிலை. இந்த பிரச்சனையில் இருந்து அத்தனை காலவர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார் அர்ஜுன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

அதிரடியான காவல்துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார் சுதீப்.சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கின்றது. காவலர்களைக் காக்க அவர் செய்யும் வேலைகள் இரசிகர்களிடம் வரவேற்புப் பெறுகின்றன.

வில்லன்களுக்காக உளவு பார்க்கும் கிரைம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்தின் திருப்பங்களுக்கு கைகொடுத்திருக்கிறது

காவலர் ஆரத்தியாக சம்யுக்தா ஹொர்னாட்,காவலர் மீனாவாக சுக்ருதா வாக்லே ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.தங்கள் வேடம் திரைக்கதையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக சுனில்,அமைச்சராக சரத் லோகிதாஸ்வா,இன்னொரு அமைச்சராக ஆடுகளம் நரேன் ஆகியோரோடு வம்சி கிருஷ்ணா, பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, அனிருத் பட்,உக்ரம் மஞ்சு உள்ளிடோரும் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.

அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பின்னணி இசை அதிரடி தான். ஒவ்வொரு சண்டைக் காட்சிகளிலும் அனல் பறக்க இசையைக் கொடுத்திருக்கிறார்.

சேகர் சந்திரா ஒளிப்பதிவிற்கு அதிகமாகவே படத்தில் பங்கிருக்கிறது. படம் இரவு மட்டுமே நகர்வதால், அதற்கான காட்சியமைப்பை அழகாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

எழுதி இயக்கி இருக்கிறார் புதியவர் விஜய் கார்த்திகேயா. ஓர் இரவுக்குள் நடக்கிற கதையை பரபரப்புடன் கொண்டு செல்லும் உத்தியில் ரசிகனை கட்டிப் போட்டு விடுகிறார், படம் தொடங்கிய 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் திருப்பங்கள் நிறைந்தவையாக நகர்த்திச் செல்லும் இயக்குநர், அடுத்தது என்ன நடக்கும்? என்ற பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.