கேம் சேஞ்சர் விமர்சனம்

ram charan game changer movie review
இயக்குனர் ஷங்கரின் முந்தைய படங்களின் பாணியில் ஊழலுக்கு எதிராக உருவாகியுள்ள இன்னொரு படம் இது. அதில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் ? பார்க்கலாம்.

ஆந்திராவில் முதல்வராக இருக்கும் ஸ்ரீகாந்த் தனது பதவிக்காலம் முடிவதற்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். ஆனால் அவரது இளைய மகன் எஸ்.ஜே சூர்யா ஊழலில் திளைப்பவர். அப்போது அங்கே கலெக்டராக பொறுப்பேற்கும் ராம்சரண் எஸ்.ஜே சூர்யாவின் ஊழல்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் எஸ்.ஜே சூர்யா தனது தந்தையே போட்டு தள்ளிவிட்டு முதல்வராக பொறுப்பேற்கிறார். இதற்குப் பிறகு ராம்சரணுக்கும் இவருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதி கதை இதை ஷங்கர் வழக்கம் போல தனது பாணியில் சொல்லி இருக்கிறார்.
மக்கள் பிரச்சனைக்காக போராடும் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும் மாவட்ட கலெக்டர் என இரண்டு வேடங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார் ராம்சரண். அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர், சில காட்சிகளில் கல்லூரி மாணவராக வந்து நடனம் மற்றும் காதல் காட்சிகள் மூலம் இளசுகளை ஈர்க்கிறார்

ராம்சரணுக்கு இணையான வேடத்தை ஏற்றிருக்கிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. அதிலும் இதுவரை நாம் பார்க்காத அளவில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் அவர் பண்ணுகிற அலப்பறைகளில் தியேட்டர் அதிர்கிறது.

இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்திருக்கிறார்.காதலனை நல்வழிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருப்பதோடு பாடல் காட்சிகளில் உடலழகைத் தாரளமாகக் காட்டியிருக்கிறார்

அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரம் திரைக்கதையின் திருப்பங்களாக பயணித்திருப்பதோடு, அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

முதல்வரின் மூத்த மகனாக வரும் ஜெயராமின் அலப்பறைக்கும் அளவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாவின் மூரக்கத்தனம் தெரிந்து அவர் அமைதியாகி விடுவதில் ஆஃப் ஆகி விடுகிறார். சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும் வலுவானது., சைடு வாங்கும் சுனில் செய்கைகள் நம்ப முடியாதவாறு இருந்தாலும் அவரது நகைச்சுவை நடிப்பில் சிரிக்க முடிகிறது.

ஒளிப்பதிவாளர் திரு காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் தமன் பாடல்களில் பழைய பாடல்களின் சாயல் தெரிகிறது. பின்னணி இசையிலும் இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது.
ஆரம்பத்தில் வரும் அந்த ரயில் சண்டைக் காட்சியும், கிளைமாக்ஸ்- இல் வரும் ஓட்டு எண்ணிக்கை பூத் சண்டைக் காட்சியும் அதிரி புதிரியாக இருக்கிறது.

கார்த்திக்சுப்புராஜின் மூலக்கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ஷங்கர். சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் சொல்வதில் கில்லாடியான இயக்குநர் ஷங்கர், இது ஆந்திரா பக்கத்து கதை என்பதால் தமிழ்நாட்டு அரசியல் குடும்ப சாயலில் உள்ள ஒரு கதையை தைரியமாக எடுத்திருக்கிறார்.