மெட்ராஸ்காரன் விமர்சனம்

madraskaaran movie review
தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் தனது திருமணம் நடக்க வேண்டும் என விரும்புகிறார் ஷேன் நிகம். திருமணத்திற்கு முதல் நாள் தனது மனைவியாக வரப்போகும் நிகாரிகாவை பார்ப்பதற்காக காரில் செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையில் ஐஸ்வர்யா தத்தா மீது கார் மோதிவிடுகிறது. அதில் கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது.

இதனால் கைது செய்யப்படும் ஷேன் நிகம் சிறையில் அடைக்கப்படுகிறார். இரண்டு வருடம் கழித்து அவர் விடுதலையாகி வரும்போது குழந்தையின் இறப்புக்கு அவர் காரணம் இல்லை என்கிற விஷயம் தெரிய வருகிறது. அதற்கு காரணமான நபர் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஷேன் நிகம்.

அதன்பிறகு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பல விஷயங்கள் தெரிய வருகின்றன. இறுதியில் குழந்தையின் இறப்புக்கு காரணமான அந்த நபரை ஷேன் நிகம் கண்டுபிடித்தாரா ? தனது காதலியுடன் திருமணத்தில் மீண்டும் இணைந்தாரா என்பது மீதி கதை.

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மலையாள நடிகர் ஷேன் நிகம், அம்மாவிடம் பாசம் காட்டி பேசுவது, காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று வயதுக்கு ஏற்ப துறுதுறு என்று நடித்திருப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

எதிர்பாராமல் அறிமுகமாகும் கலையரசனுக்கு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற ரீதியில் அவசர முடிவுகளை எடுக்கும் ஒரு முரட்டுத்தனமான பாத்திரம். நல்ல விஷயத்துக்காக குரல் கொடுக்கிறார். அல்லது அரிவாளை எடுக்கிறார். நல்லவனா?, கெட்டவனா? என்ற கேள்வியை படம் முழுதும் எழுப்பும் வகையில் நடித்திருக்கிறார்.

கதை நாயகி மீராவாக நிஹாரிகா நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும், நாயகனின் காதலியாக குறைவின்றி நடித்திருக்கிறார்.

கலையரசனின் மனைவியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். வழக்கமாக கவர்ச்சி உடையணிந்து கிளாமரான ரோல்களில் வரும் அவர், இதில் குடும்பப் பாங்கான பெண்ணாக வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருணாஸ், பாண்டியராஜன், கீதா கைலாசம், தீபா, லல்லு ஆகிய அனைவரும் ஏற்றிருக்கும் வேடத்துக்கு ஏற்ப அளவாக நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவம் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் திருமண பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக மட்டும் இன்றி கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றவாறும் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம், திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களுக்கு பரபரப்பான திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன்தாஸ்.