விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. எந்த அளவுக்கும் சென்று, எவரையும் எதிர்த்து நின்று காதலியைக் காப்பாற்றும் காதலனின் கதை.
நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல் நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார்.
ஹீரோ ஆகாஷ் முரளி தொலைக்காட்சி பார்க்கும் பொழுது தன்னுடைய காதலி அதிதி ஷங்கர் போர்ச்சுகல் நாட்டில் ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதைப் பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்கிறார்.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தன் காதலியை சந்திக்கிறார். இருவருக்கும் எப்படி காதல் வந்தது? ஏன் பிரிந்தார்கள் ? அதிதி என்ன குற்றம் செய்தார் என்பதை யூத்புல்லான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
நாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் முரளியின் இளையமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி.திரைப்படக் கதாநாயகனுக்குரிய அம்சங்களுடன் இருக்கிறார். சண்டை,நடனம் ஆகியன மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் இயல்பாக இருக்கிறார்.சோகம் ஆற்றாமை ஆகிய உணர்சுகளை வெளிப்படுத்தக் கூடிய இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகி அதிதி சங்கர் தனது க்யூட்டான நடிப்பில் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். சிரிப்பாலும் தனது வசன உச்சரிப்பாலும் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டிருக்கிறார் அதிதி சங்கர்.
கதையின் முக்கிய திருப்பங்களாக நடித்திருக்கும் சரத்குமார், குஷ்பூ, ராஜா, பிரபு அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது. சேசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் பாணியில் படமாக்கப்பட்டிருக்கிறது.
வேலைக்காக வெளிநாடு செல்லும் காதலிக்கு அங்கே ஒரு பயங்கர சிக்கல், அதிலிருந்து நாயகியை விடுவித்துக் காப்பாற்ற அந்நாட்டுக்கு கிளம்பி செல்லும் காதலன்.. அவன் முயற்சி பலித்ததா?’ என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்துக்கொண்டு, இக்கால இளசுகளுக்குப் பிடிக்கும் வகையில் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார். அதை வழக்கம்போல தன்னுடைய ஸ்டைலிஷான பாணியில் கொஞ்சம் காதலை சொல்லி அதில் பல அதிரடி திருப்பங்களை கொடுத்து மனதை கவரும் விதமாக தொய்ய்வில்லாமல் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.