ஆந்திராவை சேர்ந்த நாக சைதன்யா மீனவ இளைஞன். அதே பகுதியை சேர்ந்த சாய் பல்லவியும் இவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சாய் பல்லவி மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்க நாகசைதஞாவிடம் வற்புறுத்துகிறார்.
இந்தநிலையில் தான் குஜராத் சேட் ஒருவருக்காக நாகசைதன்யாவும் அவர் ஊரைச் சேர்ந்தவர்களும் அரபிக்கடலில் மீன் பிடிக்கிறார்கள். ஒருமுறை புயல் காரணமாகப் பாகிஸ்தான் கடல் எல்லைக்குச் சென்றுவிடுகிறது நாக சைதன்யா குழுவின் படகு. பாகிஸ்தான் கடலோரக் காவல்படை அவரையும் அவருடன் மீன் பிடிக்கச் சென்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது.சிறையிலிருந்து அவர்களை மீட்கப் போராடுகிறார் சத்யா. அவர் போராட்டம் வென்றதா? இருவரும் இணைந்தார்களா என்பது கதை.
மீனவர்களை வழிநடத்துவது, தன்னை நம்பி வருவோருக்காக இறுதி வரை நிற்பது, காதல், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாகவும், நடன காட்சிகளில் உணர்வுபூர்வமாகவும் என படம் முழுவதும் தனித்துவமான நடிப்பை வழங்குகிறார் நாகா சைதன்யா
காதலுக்காக உருகுவது அதே காதலனை காப்பாற்றுவதற்காக போராடுவது, காதலன் இடத்தில் இருந்து மீனவ குடும்பங்களின் பிரச்சனைகளை தீர்ப்பது என்று நாயகனுக்கு இணையாக வலம் வந்து திறம்பட பிரகாசிக்கிறார் சாய்பல்லவி.
ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், பாகிஸ்தான் சிறை அதிகாரி பிரகாஷ் பெலாவடி, நாகசைதன்யாவின் அம்மாவாக வரும் கல்பலதா என துணை கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், கடல் காட்சிகள் அனிமேஷன் என்பது அப்பட்டமாக தெரிவதோடு, நாயகனின் கடற்கரை கிராமம் மற்றும் அங்கிருப்பது கடலா? என்ற கேள்வியையு எழ வைக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தண்டேல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி. முதல் பாதியில் மீனவர்களின் வாழ்வியல் முறையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மறைந்திருக்கும் கடினங்களையும், உணர்வுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் விவரித்திருக்கிறார் இயக்குநர்.