சப்தம் : விமர்சனம்


கல்லூரி ஒன்றின் மாணவ மாணவிகள் அகாலமாக தற்கொலை செய்து கொள்ள நேர, அது ஆவிகள் சம்பந்தப்பட்ட விஷயமாக வெளியில் செய்தியாவதில் கல்லூரி நிர்வாகம் கவலை கொள்கிறது. அந்த மர்மத்தை அறிவார்த்தமான முறையில் அணுக ‘கோஸ்ட் ரைடர்’ எனப்படும் அறிவியல் முறையில் ஆவிகளைக் கண்டுபிடிக்கும் ஆதி வரவழைக்கப்படுகிறார். கல்லூரி நிர்வாகம் எதிர்பார்ப்பது ‘ ஆவியெல்லாம் ஒன்றும் இல்லை…’ என்று அறிவியல் ரீதியாக ஆதி நிரூபிக்க வேண்டும் என்பதே. ஆனால் அதை மீறி அங்கே அமானுஷ்யம் இருப்பதை ஆதி கண்டுபிடிக்க… அடுத்தடுத்த நிகழ்வுகளும், அது எப்படி முடிவுக்கு வந்தது என்பதுவும்தான் கதை.

அமைதியான மற்றும் அழுத்தமான ஆராய்ச்சியாளர் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் நாயகன் ஆதி.நாயகியை ஓர் சக்தி பின் தொடர்வதைக் கண்டுபிடிக்கும் நேரம் உட்பட பல நேரங்களில் அக்காட்சிகளின் உணர்வுகளைத் தம் உடல்மொழியாலேயே நமக்குக் கடத்திவிடுகிறார்.

ஆவியால் பாதிக்கப்படவராக வழக்கமான கதாநாயகி வேடத்தில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். புரியாத புதிரான மருத்துவ ஆய்வாளராக, ஆவிகளிடம் மாட்டிக் கொண்டு தவித்து கதறும் போதும், அங்கே நடக்கும் சம்பவங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் முழு பங்களிப்பை கொடுத்துள்ளார்.

சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ராஜீவ்மேனன் என நிறையப்பேர் படத்தில் இருக்கிறார்கள்.அவரவர் தகுதிக்கேற்ற வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சப்தம் தான் படத்தின் மையக்கரு என்பதால், பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் தமன்.

ஒளிப்பதிவாளர் அருண்பத்மநாபன் இப்படத்தின் திரைக்கதையை உணர்ந்து அதற்கேற்ற வண்ணங்கள் ஒளியமைப்புகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி காட்சிகளை இரசிக்க வைத்திருக்கிறார்.

ஈரம்’ படம் மூலம் தண்ணீரில் ஆத்மாவை பயணிக்க வைத்து பார்வையாளர்களை அலற வைத்த இயக்குநர் அறிவழகன், இதில் சப்தங்கள் மூலம் ஆவிகளை பயணிக்க வைத்திருக்கிறார். ஒரு உணர்ச்சிபூர்வமான திகில் கலந்த பழிவாங்கும் அமானுஷ்யம் கலந்த ஒலி கலவைகளின் சங்கமமாக முக்கிய பார்வையாளர்களை ஈர்க்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிவழகன்.